புதுச்சேரியில் கடந்த சனிக்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது மாயமான 9 வயது சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாக கொன்று ஓடையில் உடலை வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்தவர் நாராயணன். ஓட்டுனரான இவருக்கு 9 வயதில் ஒரு மகள் இருந்துள்ளார். இவர் அங்கு உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுமி திடீரென காணாமல் போனார். மேலும் வழக்கமாக விளையாடிவிட்டு வீட்டிற்கு மகள் வருவாள் என்று எதிர்பார்த்து இருந்த பெற்றோர்கள் மகள் வராததால் அதிர்ச்சி அடைந்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடும் பணியை துவங்கினர். ஆனால் சோலை நகர் முழுவதும் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகள் அனைத்தையும் ஆய்வு செய்தனர். அதில் சிறுமி தனியாக நடந்து செல்லும் வீடியோ பதிவாகி இருந்தது. கடந்த 4 தினங்களாக சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.
கும்பகோணத்தில் ரூ.50 ஆயிரம் நன்கொடை கேட்டு விசிகவினர் அடாவடி; கடை உரிமையாளர் மீது தாக்குதல்
இந்நிலையில் காணாமல் போன சிறுமி கை, கால்களை கட்டப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி அவரது வீட்டருகே உள்ள சாக்கடையில் சிறுமியின் உடலை போட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறியும், குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரி பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் முத்தியால்பேட்டை மணிகூண்டு அருகே மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மறியல் தொடர்ந்தது. இதனையடுத்து அங்கு துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.