பெரம்பலூர் அருகே வயதான தம்பதியினரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தொண்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் வயது 80. இவரது மனைவி பார்வதி என்ற மாக்காயி வயது 70. இவர்களுக்கு காந்தி, செல்வாம்பாள், மாக்காயி, சரசு என்ற நான்கு மகள்கள் உள்ளனர். நால்வருக்கும் திருமணம் ஆகி அதே ஊரில் கணவருடன் வசித்து வருகின்றனர். இறந்த வயதான தம்பதியினர் இருவரும் ஊருக்கு நடுவில் ஒரே வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்.15 வரை அவகாசம் நீட்டிப்பு
இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்த போது இருவரும் கழுத்தை அறுத்து இரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் வி. களத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வி.களத்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
வீட்டிலிருந்து குறிப்பிட்ட தூரம் வரை மிளகாய் பொடி கொட்டியிருந்தது கொலையாளி தன்னை மோப்ப நாய் அடையாளம் கண்டு விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்திருப்பான் என்று கூறப்படுகிறது. இறந்த பார்வதியின் கழுத்தில் தாலி மட்டும் இருந்துள்ளது தாலி கொடியுடன் கூடிய கருகமணி இல்லாமல் இருந்ததும் தெரியவருகிறது.
பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய மு.க.அழகிரி
சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தலைமையிலான காவல் துறையினர் கொலை செய்யப்பட்ட வீட்டின் அருகில் இருந்த மிளகாய் பொடி கொட்டியிருந்த இடம் மற்றும் அருகில் இருந்த சோலை காடுகளை ஆய்வு செய்த போது அங்கு மிளகாய் பொடி தூவியிருந்த பிளாஸ்டிக் பை மற்றும் மதுபானத்துடன் கூடிய பாட்டிலும் இருந்துள்ளது. பின்னர் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவு காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊருக்கு நடுவில் நடைபெற்ற இந்த துணிகர கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.