கரூரில் வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தி போதை ஊசிகள் தயாரித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் போதைப் பொருள் நடமாட்டம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கரூர் மாவட்டத்திலும் போதைப் பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே வலி நிவாரண மாத்திரைகளை போதை ஊசியாக தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவரை காவல் துறையினர் பிடித்து விசாரித்ததில், விஷால் கார்த்தி என்பவர் இணையதளம் மூலமாக வலி நிவாரண மாத்திரையை போதை ஊசியாக மாற்றுவதற்கான மருந்து பொருட்களை வாங்கி, கூட்டாளிகளுடன் சேர்ந்து விற்பனை செய்தது தெரியவந்தது.
வலி நிவாரண மாத்திரையாக பயன்படும் மாத்திரையை ஆன்லைனில் 10 மாத்திரைகள் அடங்கிய அட்டையின் விலை 400 ரூபாய், ஒரு மாத்திரையை 200 ரூபாய்க்கு ஊசி மூலம் நரம்பு மூலமாக செலுத்துவதால் உச்சகட்ட போதை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனை விற்பனை செய்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவர் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததை அறிந்த கரூர் நகர காவல் துறையினர் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த விஷால் கார்த்தி, ஆன்லைன் மூலமாக வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி கொடுத்ததும், மேலும் இதில் தொடர்புடைய கரூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுரேந்திரன் (வயது 23), பசுபதிபாளையம், அலெக்சாண்டர் (23), தெற்கு காந்திகிராமம், இலியாஸ்(25), பரமத்திவேலூர், பிரபு (21), பரமத்தி வேலூர் பகுதியைச் சார்ந்த இவர்கள் மூலமாக இந்த போதை மாத்திரையை ஊசியாக மாற்றி கரூரில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.
அழகிரியின் மகன் துரை தயாநிதி.. வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி - முழு விவரம்!
இந்த வலி நிவாரண போதை மாத்திரையை ஊசி மூலமாக பயன்படுத்துவதால் இதய நோய், மனநோய், உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. எனவே, போதை மருந்துகள் மற்றும் மனநோய் ஏற்படுத்தும் சட்டத்தின் கீழ் கரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, 6 பேரையும் கைது செய்தனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் தொடர்ந்து கண்காணித்ததில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் கல்லூரி மாணவர் ஒருவரின் சட்டை பாக்கெட்டில் ஊசி இருந்ததை கண்டுபிடித்ததை தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டதில் இந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வலி நிவாரண மாத்திரையை போதை ஊசியாக கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.