சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பாக 45 வயது மதிக்கத்தக்க நபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் கோட்டை பகுதியில் மாநகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. எந்த நேரமும் பரபரப்பாக காணக்கூடிய மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபாதையில் ஏராளமான யாசகர்கள் இரவு நேரங்களில் தங்குவது வழக்கம். இந்த நிலையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து கிடப்பதாக டவுண் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் டவுண் காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு கண்ணா மற்றும் உதவி ஆணையாளர் சுரேஷ் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யபட்ட நபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சடலம் அருகே தலையில் ரத்த காயத்துடன் இருந்த யாசகர் ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
கோவையில் தடுப்பணையில் மூழ்கிய 3 சிறார்கள்; வெப்பம் தாங்காமல் நீர் நிலைக்கு சென்றபோது சோகம்
முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபரின் அருகே இருந்த நபர் நெத்திமேடு முனியப்பன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரபாகரன் என்பதும், தினந்தோறும் இரவு நேரத்தில் மாநகராட்சி அலுவலகம் முன்பு படுத்து உறங்க வருவதும் தெரிய வந்தது. மேலும் இறந்த நபருக்கும், பிரபாகரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பிரபாகரன் முன்னுக்குப் பின் முரணாக பேசி வந்துள்ளதாகவும் விசாரனையில் தெரிய வந்துள்ளது. மது அருந்திய நிலையில் இருந்த பிரபாகரன் தகராறில் அருகில் இருந்த கல்லை தூக்கி போட்டு கொலை செய்தாரா? ஏதாவது முன்விரோதம் காரணமா? அல்லது பண தகறாரா? வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து பிரபாகரனை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மிகவும் பரபரப்பாக இருக்கும் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.