கோவையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், நீதிமன்றத்தில் சாதமகாக சாட்சி சொல்லக்கோரி பெண்ணின் தந்தையை மிரட்டிய மூவரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
கோவை செல்வபுரம் பகுதியைச் இளம் பெண் ஒருவர் கடந்த 2019ம் ஆண்டு சில வாலிபர்களால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டார். இது குறித்த புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கோவை வடவள்ளி தில்லை நகரைச் சேர்ந்த கார்த்திக் (எ) பப்ஸ் கார்த்திக் (29), ஆட்டோ மணி (33), பி.என் புதூர் பொன் நகரை சேர்ந்த மணிகண்டன் (35), ராகுல், நாராயணமூர்த்தி, கார்த்திகேயன் மற்றும் பிரகாஷ் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவர்கள் அடிக்கடி பெண்ணின் தந்தையை வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நேற்று செல்வபுரம் பகுதியில் பெண்ணின் தந்தை நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பப்ஸ் கார்த்திக், ஆட்டோ மணி உள்ளிட்டோர் பெண்ணின் தந்தையிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
VAO Suicide: திருமணமாகாத விரக்தியில் VAO தற்கொலை? கோவையில் பரபரப்பு
மேலும் நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமாக சாட்சி சொன்னால் ரூ.15 லட்சம் தருகிறோம் என தெரிவித்தனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி பெண்ணின் தந்தையை தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பினர். இது குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல்துறை ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில், உதவி ஆய்வாளர் மியாரிட் மனோகரன் மற்றும் காவலர்கள் அவர்களைத் தேடிப் பிடித்து வழக்குப் பதிவு செய்து பப்ஸ் கார்த்திக், ஆட்டோ மணி, மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களில் பப்ஸ் கார்த்திக் மீது போக்சோ, பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 7 வழக்குகள் கோவை காவல் நிலையங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.