கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஓட ஓட வெட்டி கொலை

By Velmurugan s  |  First Published Feb 13, 2023, 10:01 AM IST

இந்து முன்னணி அமைப்பின் பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நபர் 6 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை மாவட்டம் பாப்பநாயக்கன் பாளையம் அடுத்த பழையூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி என்ற சத்தியபாண்டி (வயது 32). ஓட்டுநரான இவர் நேற்று இரவு நவஇந்தியாவில் இருந்து ஆவாரம் பாளையம் செல்லும் சாலையில் உள்ள இளநீர் கடையில் அமர்ந்து தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சத்தியபாண்டியை சூழ்ந்துள்ளனர்.

அவர்களைப் பார்த்ததும் சுதாரித்துக்கொண்ட சத்தியபாண்டி உடனடியாக அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றுள்ளார். இருப்பினும் விடாமல் துரத்திய கும்பல் சத்தியபாண்டியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதில் பலத்த காயமடைந்த சத்தியபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து  உடலை கைப்பற்றிய கோவை ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tap to resize

Latest Videos

கொலை செய்யப்பட்ட நபர் கடந்த 2020ம் ஆண்டு கோவை காந்திபுரம் பகுதியில் இந்து முன்னிணி பிரமுகரான பிஜூ என்பவரின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். ஜாமீனில் வெளியே வந்திருந்தவர் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார். முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தப்பி ஓடிய கும்பல் சத்தியபாண்டியை கொலை செய்வதற்காக துப்பாக்கியை கொண்டு சுட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இது தொடர்பாக தெளிவு படுத்த முடியும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வழக்கு தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

click me!