
ஏற்கனவே 2 திருமணமான கணவன் 3வது மனைவியை குடும்பத்துடன் சேர்ந்து குத்திக்கொலை செய்து எரித்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் கணவனின் குடும்பத்தினரை போலீசார் கூண்டோடு கைது செய்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதை தடுக்க காவல்துறை எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, சிலர் திருமணம் என்ற பெயரில் குடும்ப வன்முறையில் ஈடுபட்டு பெண்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது, இந்த வரிசையில் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்த இளைஞர் மூன்றாவதாக திருமணம் செய்து அப்பெண்ணை எரித்துக் கொலை செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது.
முழு விவரம் பின்வருமாறு, மதுரை மாவட்டம் நத்தம் பஞ்சம் பட்டியை சேர்ந்தவர் அர்ஜுனன் (25) இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். முதல் மனைவியை 10 நாட்களிலேயே விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது, அதன் பின்னர் இவருக்கு அவரது பெற்றோர் இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அந்தப் பெண்ணுடன் அர்ஜுனன் குடும்பம் நடத்தவில்லை, அந்தப் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என காரணம் காட்டி பிரிந்துவிட்டார். அதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் புதுப்பட்டி அருகே உள்ள பஞ்சம்பட்டி சேர்ந்த ராசாத்தி (19) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் நடந்தது. 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது, தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழும்படி ராசாத்தியை அர்ஜுனன் அழைத்தார், ஆனால் ராசாத்தி அதை கேட்கவில்லை, இந்நிலையில் அர்ஜுனன் தான் வேலை செய்யும் சென்னை விருகம்பாக்கத்திற்கே மனைவி ராசாத்தியை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் அர்ஜூனன் வேலைக்கு சென்றுவிடும் நேரத்தில் ராசாத்திக்கு சில ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் அர்ஜுனனுக்கு தெரிந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர் ராசாத்தியை அன்பாகப் பேசி கிராமத்துக்குப் போய் வரலாம் என அழைத்துள்ளார்.
எனது கடந்த ஜூன் 28 ஆம் தேதி மனைவி ராசாத்தியை அழைத்துக்கொண்டு ஊருக்கு சென்றார் அர்ஜுனன், அப்போது கொட்டாம்பட்டி பள்ளப்பட்டி அருகே பேருந்தில் இருந்து இறங்கிய போது அங்கு அர்ஜுனனின் பெற்றோர் காத்திருந்தனர். அர்ஜுனனின் தாய் குழந்தையை வாங்கிக் கொண்டார்,அவர்கள் தென்னந்தோப்பு வழியாக வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த போது திடீரென அர்ஜுனன் மற்றும் அவரது தந்தை மறைத்து வைத்திருந்த கத்தியால் ராசாத்தியை சரமாரியாக குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராசாத்தி சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். பின்னர் உடலை யாருக்கும் தெரியாமல் தீ வைத்து எரித்தனர்.
இந்நிலையில் உடல் முழுவதுமாக எரியவில்லை, அதற்குள் அவர்கள் அங்கிருந்து அவர்கள் சென்றுவிட்டனர். பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதை கண்ட பொது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எரிந்த நிலையில் இருந்து ராசாத்தியின் புகைப்படத்தை வெளியிட்டு அடையாளம் தெரிந்தவர்கள் கூறலாம் என தெரிவித்திருந்தனர். இதைக்கண்ட ராசாத்தியின் பெற்றோர் அவர் அணிந்திருந்த தாலியில் அடையாளத்தை வைத்து கொலை செய்யப்பட்டது தனது மகன் ராசாத்தி எனக் கூறினார்.
இதையடுத்து கொலையில் தொடர்புடைய கணவன் அர்ஜுனன் அவரது தாய் அரியம்மாள் (45) தந்தை ராசு (50) அவரது உறவினர்கள் ரவி (40) சிவலிங்கம் (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.