பெரம்பலூரில் பாதி எரிந்த நிலையில் கிடந்த இளைஞரின் உடலால் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Feb 21, 2023, 7:33 PM IST

பெரம்பலூரில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பெரம்பலூர் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகே ராஜ சிதம்பரம் என்ற விவசாயி தனது நிலத்தில் இன்று  காலை சுமார் 7.30 மணியளவில் சோளம் பயிர் அறுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தனது நிலத்தில் ஒரு ஆண் சடலம் பாதி எரிந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இது தொடர்பாக பெரம்பலூர் நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் நகர காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான குழுவினர் பார்த்த போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் உடல் பாதி பகுதி எரிந்த நிலையில் அடையாளம் காண முடியாத அளவில் கிடந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி, பெரம்பலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் பழனிசாமி உள்ளிட்டோரும் பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து அங்கு மோப்ப நாய் பிரிவு மற்றும் தடயவியல் நிபுணர்கள்  வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இளைஞர் உயிரிழந்தது கொலையாக இருக்குமோ அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் ஒருவரின் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!