
டெல்லியின் வடக்கு பகுதியில் 19 வயது இளைஞர் துப்பாக்கி முனையில் உயிரிழந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்த இளைஞன் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நபர் சோஹைல் ஆவார். இந்த சம்பவம் பற்றி அந்த பகுதி போலீசாருக்கு இரவு 10.40 மணிக்கு தகவல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சோஹைல் உடல் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்தனர்.
உயிரிழப்பு:
உடனடியாக சோஹைலை அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில், சோஹைல் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த சோஹைல் டெல்லியை அடுத்த ஸ்ரீ ராம் காலனியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இவர் கார்மண்ட் ஃபேக்டரி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த பீட் அதிகாரிக்கு இது பற்றிய தகவல் முதலில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. “காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர், அங்கு இரத்த வெள்ளத்தில் ஒருவர் கீழே கிடப்பதை போலீசார் பார்த்தனர். அருகில் சென்று பார்த்ததில், கீழே கிடந்தவரின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததற்கான அடையாளம் இருப்பதை போலீசார் உறுதிப் படுத்தினர். முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் பற்றிய தகவல் கிடைத்து இருக்கிறது. இவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. விரைவில் இவர் கைது செய்யப்படுவார்” என காவல் துறை துணை ஆணையனர் சஞ்சய் குமார் செயின் தெரிவித்தார்.
விசாரணை:
சம்பவம் அரங்கேறிய பகுதியில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அதன் பின்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்தில் அடுத்தக் கட்ட விசாரணை துவங்கி இருக்கிறது என மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.
சோஹைல் உடல் கைப்பற்றப்பட்டதை அடுத்து அவரின் உறவினர் முபாரக் அன்சாரி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “சோஹைல் எனது அத்தை மகன். அவன் எங்கள் வீட்டில் எங்களுடன் தான் வசித்து வந்தான். இந்த சம்பவம் பற்றி என் நண்பன் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது. நான் இங்கு வந்ததும், அவன் தரையில் விழுந்து கிடந்தான். யாரோ சிலர் இவனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, இங்கிருந்து தப்பி சென்றதாக எனக்கு சிலர் கூறினர். போலீசார் இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் சோஹைலை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.”
“கொலை செய்தது யார் என்று போலீசார் விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். அவனுக்கு எதிரிகள் யாரும் கிடையாது. அவன் வேலைக்கு சென்றால் நேரடியாக வீட்டிற்கு வந்து விடுவான். அவன் எங்களுடன் கடந்த ஆறு ஆண்டுகளாக வசித்து வருகிறான். அவன் இதுவரை யாரிடமும் சண்டை போட்டதாக எங்களுக்கு ஒருமுறை கூட தகவல் எதுவும் கிடைத்ததே இல்லை,” என அவர் மேலும் தெரிவித்தார்.