தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது. ஆனாலும், ஒவ்வொரு நாளும், தினசரி கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,53,390 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 256 ஆக உள்ளது. 23 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். இதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,15,109 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.
undefined
இதுவரை மொத்தம் 38,025 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் வேகமாக குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது பல்வேறு நாடுகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று தாக்கம் அதிகமாக உள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கொரோனா பாதிப்பு நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆக பதிவாகி உள்ளது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் கடந்த காலத்தை போல் கண்டிப்பாக அல்லாமல் அன்போடு அனைவரும் மாஸ்க் அணிந்து கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துகின்றனா். விமான பயணிகள் போர்டிங் பாஸ் வாங்கும் கவுண்டரில் மாஸ்க் அணிந்து இருந்தால் மட்டுமே போர்டிங் பாஸ் கொடுக்கின்றனர். அணியாதவர்களை ஏன் அணிய வில்லை? என்று கேட்டு மாஸ்க் அணிய கூறுகின்றனா்.
சென்னை ஐஐடியில் நேற்று ஆய்வு நடத்திய பின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ‘சென்னை ஐஐடியில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது வரை 365 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 25 ஆயிரமாக உயர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது இடங்களுக்கு செல்லும்போது பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை அவசியம் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. முகக்கவசம் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால், நமக்கும் டெல்லியின் நிலை ஏற்படும். டெல்லி, மராட்டியம்,கேரளா ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது. தற்போதைய தொற்று அதிகரிப்பை கொரோனா 4ஆம் அலையின் தொடக்கம் என கூற முடியாது.
பல இடங்களில் சானிடைசர் வழங்குவது நிறுத்தப்பட்டிருப்பது கவலைக்குரியதாக உள்ளது. முகக்கவசம் அணிய தேவையில்லை என சில மாநிலங்கள் கூறினாலும் தமிழக அரசு கூறவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, கவனக்குறைவு ஆகியவையே தொற்று பரவுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும்' என்று கூறினார்.