டெல்டா போன்று தீவிரமாக ஒமைக்ரான் இல்லை..? இனி முழு ஊரடங்கு இருக்காதா..? மருத்துவர்கள் சொல்வது என்ன..?

By Thanalakshmi V  |  First Published Jan 12, 2022, 5:44 PM IST

டெல்டா வைரஸ் போன்று ஒமைக்ரான் அதிகளவு  பாதிப்புகளை ஏற்படுத்தாதநிலையில் , இதே தொடர்ந்தால் தீவிர முழு முடக்கம் போடவேண்டிய தேவை இருக்காது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
 


இந்தியாவில் சுனாமி வேகத்தில் அதிகரித்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 60,405 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் 442 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 9,55,319 ஆக அதிகரித்துள்ளது. 

எனினும் முந்தைய இரண்டு அலைகளைப் போல் இந்த அலையில் பாதிப்பு அதிகம் இல்லை என்பதும் உருமாறிய கொரோனா வைரஸான ஒமைக்ரான் தீவிர நோய் பாதிப்பை உண்டாக்கவில்லை எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கூறுகையில், ‘தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த டிசம்பர் 26 ஆம் தேதியிலிருந்து தொற்று அலை மெல்ல மெல்ல அதிகரிக்க  தொடங்கியது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே ஓமைக்ரான் எனும் புதிய உருமாற்றத்தின் வேகமான பரவலால் வேகம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

ஓமைக்ரான் தொற்றானது ஒருவருக்கு ஏற்பட்டால் உடன் இருப்போர்களுக்கு உடனே பரவுகிறது. எனவே காணுமிடமெங்கும் மக்கள் லேசான தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, இருமல், காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி என்று மருத்துவமனைகளில் மருத்துவர்களைச் சந்தித்தும், நேரடியாக மருந்தகங்களில் மாத்திரை வாங்கி போட்டும் சமாளித்து வருகிறார்கள். மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனாவுக்கான பரிசோதனையை செய்து கொள்வது நல்ல முடிவாகும்.  

பெரும்பான்மை மக்களுக்கு சாதாரண தொற்றாக இது வெளிப்பட்டாலும் பலரும் காய்ச்சல், அதீத உடல் சோர்வு போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படுகிறார்கள். எனவே இந்த அலையில் கட்டாயம் ஓய்வு அவசியம். யாருக்கேனும் மேற்சொன்ன அறிகுறிகள் இருப்பின் தயவு கூர்ந்து வீட்டில் முகக்கவசம் அணிந்து கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளவும். பரிசோதனை பாசிடிவ் என்று வந்தால் மருத்துவ அறிவுரையின் பேரில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் நாம் அனைவரும் தடுப்பூசிகளை வெகுவாக வரவேற்று சிறப்பாக பெற்றுக் கொண்டமையாலும் டெல்டாவால் கடந்த மே மாதம் உருவாக்கப்பட்ட பெரிய அலை மூலம் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெற்றமையாலும் தற்போது ஓமைக்ரான் அலையை தமிழ்நாடு சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது. இந்த அலையின் மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் நாம் தற்போது வரை நல்ல நிலையில் இருக்கிறோம்.

நேற்றைய  நிலவரப்படி சென்னை பெருநகரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 91% ஆக்சிஜன் படுக்கைகளும் 92% ஐசியூ படுக்கைகளும் காலியாக உள்ளன. டெல்டா அலை உருவானபோது இதே மூன்றாவது வாரத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனாவின் இந்த உருமாற்றம் தற்போது வரை பெரும்பான்மை மக்களுக்கு, குறிப்பாக இரண்டு தடுப்பூசி பெற்றவர்களுக்கும் ஏற்கனவே டெல்டா தொற்று ஏற்பட்டு குணமானவர்களுக்கும் லேசானதாக அல்லது தாங்கக்கூடிய தொற்றாக வெளிப்படுகிறது.

அதே போல் தடுப்பூசி பெறாதவர்களுக்கு தொற்று ஏற்படும்போது அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. முறையாக பரிசோதனை செய்து தேவைப்பட்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். இதே சிறப்பான நிலை அடுத்த வாரமும் தொடர்ந்தால் தமிழ்நாட்டில் தீவிர லாக்டவுன் வருவதற்கு வாய்ப்பு மிகமிக குறைவு. தொடர்ந்து வரும் பண்டிகை நாட்களிலும் முகக்கவசம், இரண்டு டோஸ் தடுப்பூசி, கைகளை சுத்தமாக கழுவுதல், தனிமனித இடைவெளி, கூட்டம் கூடாமல் இருத்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்’’ என்கிறார். 

click me!