நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, ஆக்சிஜன் கையிருப்பை உடனே உறுதிப்படுத்துமாறு கோரி அனைத்து மாநில அரசுகளுக்கு,மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அவதாரமான ஓமிக்ரான் வைரஸ் தொற்று, இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, குஜராத், உத்தர பிரதேசம், கர்நாடா உள்ளிட்ட மாநிலங்களில் பரவி உள்ளது. ஓமிக்ரான் வைரஸ் தொற்று டெல்டா வகை கொரோனா தொற்றுகளை விட மிகவும் ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
undefined
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், கொரோனா அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு , ஆக்சிஜன் கையிருப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு,கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ‘குறைந்த பட்சம் 48 மணி நேரத்திற்கு தேவையான மருத்துவ ஆக்சிஜன் கையிருப்பில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும்,திரவ நிலை மருத்துவ ஆக்சிஜனை எந்தவித தடையும் இல்லாமல் எடுத்து செல்லும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அனைத்து மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.