NeoCov virus:உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இல்லை.. நியோகோவ் வைரஸ் பற்றி வெளியான புது தகவல்..

By Thanalakshmi VFirst Published Jan 28, 2022, 6:25 PM IST
Highlights

புதிதாக கண்டறியப்பட்டுள்ள நியோகோவ் வைரஸ் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இல்லை எனவும் முழுமையாக ஆய்வுத் தகவல் வெளியான பின்னர்தான் அதன் பாதிப்பு குறித்து தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதில் இருந்து தற்போது வரை கொரோனா எனும் வைரஸ் பல்வேறு வகையில் உருமாற்றங்கள் அடைந்துக்கொண்டு இருக்கிறது. 

ஆல்பா, பீட்டா, காமா,டெல்டா,டெல்டா பிளஸ்,ஒமைக்ரான்,டெல்மிக்ரான் என பல்வேறு பெயர்களில் உருமாற்ற அடைந்த கொரோனா வைரஸ் குறிப்பிடப்பட்டது. ஆனால், இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா உருமாற்றம் அடைந்த வைரஸ் பல்வேறு உயிர்சேதங்களை ஏற்படுத்தியது. கொரோனா இரண்டாவது அலையில் நாடே ஸ்தம்பித்து போனது என்றே சொல்லலாம்.

இதனிடையே டெல்டா அலையில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்த நிலையில், ஒமைக்ரான் எனும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கடந்த நவம்பர் இறுதியில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் டெல்டாவைவிட மிக அதிக அளவில் பரவும் தன்மைகொண்டது என்று அறிவிக்கப்பட்டது. கண்டறியப்பட்ட சில வாரங்களிலே உலக நாடுகள் முழுவதும் பரவிய இந்த ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவினாலும் உயிர்ச்சேதம் அதிக அளவில் இல்லை என்று ஆய்வுகள் தெரிவித்தன. 

மேலும் இரண்டு டோஸ், பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஒமைக்ரான் நோய் தொற்றிலிருந்து எளிதில் குணமாகி உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.மருத்துவமனை சிகிச்சையில் சேருவோரின் எண்ணிகையும் கணிசமாக குறைந்தது. பெரும்பாலும் நோய் தொற்று ஆளானவர்கள் வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் பல்வேறு நாடுகள் பொது முடக்கம், ஊரடங்கு உள்ளிட்டவற்றில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தன.

உலக சுகாதார அமைப்பு, ஐரோப்பிய யூனியன் நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வர இருக்கிறது எனத் தெரிவித்தன. இந்த நிலையில்தான் தென்ஆப்பிரிக்காவில் MERS-Cov என்ற நியோகோவ் எனும் புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் 3-ல் ஒருவரை கொல்லும் கொடிய தன்மை கொண்டது என சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் கடந்த 2012- 2015 ஆம் ஆண்டுகளில் மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய மெர்ஸ் - கோவ் வைரஸ் மற்றும் மனிதர்களிடம் கோவிட்டை ஏற்படுத்திய சார்ஸ் - கோவ் 2 ன் கலவையாக காணப்படுகிறது. நியோகோவ் வைரஸ், தென் ஆப்ரிக்காவில் முதலில் வவ்வால் இனங்களில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இனங்களில் மட்டுமே பரவியது. தற்போது பயோ ரிக்ஸ்வி இணையத்தின் ஆராய்ச்சி முடிவுகளின்படி நியோகோவ் மற்றும் அதன் நெருங்கிய தொடர்புடைய பிடிஎப்-2180- கோவ் வைரஸ் மனிதர்களிடம் பரவும் தன்மை பெற்றுள்ளது.

வூஹான் பல்கலை மற்றும் சீன உயிர் இயற்பியல் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கருத்தின்படி, இந்த வைரஸ்கள் மனிதர்களிடம் பரவுவவதற்கு,அதில் ஒரு உருமாற்றமே போதும் என தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ்கள், மனித உடலில் உள்ள செல்களுடன் பிணைப்பை ஏற்படுத்துவதால், ஆபத்தை ஏற்படுத்துகின்றன. 

இது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அல்ல. திரிபு அல்லது வவ்வாலிடம் இருந்து பரவிய புது வகையான வைரஸாக இருக்கலாம் எனவும் கண்டறிந்துள்ளனர். இதனால் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. சீனா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தது முதற்கட்ட சோதனைதான். முழுமையாக ஆய்வுத் தகவல் வெளியான பின்னர்தான் அதன் பாதிப்பு குறித்து தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய நோய் எதிர்ப்பு சக்தி இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!