NeoCov Virus: தடுப்பூசி போட்டாலும் தாக்கும் நியோகோவ்..? வூகான் விஞ்ஞானிகளின் அறிக்கை சொல்வது என்ன.?

By Thanalakshmi VFirst Published Jan 28, 2022, 5:37 PM IST
Highlights

சுவாசக்கோளாறுகள் அல்லது நோய்த்தடுப்பு ஊசி போடப்பட்டவர்களுக்கு உற்பத்தியாகும் ஆன்டிபாடிகள் அல்லது புரத மூலக்கூறுகள் நியோகோவ் வைரசுக்கு எதிராக பாதுகாக்க முடியாது என்று வூகான் விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலில் பரவியது. இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் தொற்று பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து, சுகாதாரத் துறையை அச்சுறுத்தி வருகிறது.முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை மற்றும் மாறுபட்ட கொரோனா என உருமாற்றம் அடைந்து மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கிவருகிறது. ஆல்பா,காமா,டெல்டா,டெல்டா பிளஸ்,ஒமைக்ரான், டெல்மைக்ரான் எனும் பல விதங்களில் கொரோனா வைரஸ் உருமாறி வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸை கவலை அளிக்கும் வைரஸாக உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டாலும், பின்னர் அது வேகமாக பரவுகிறதே தவிர மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டனர். இந்நிலையில், மிகவும் அபாயகரமான, நியோகோவ் (NeoCov) என்ற வைரஸ் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய வைரஸ் அதிக இறப்புகளை ஏற்படுத்தும் என்றும், அதே சமயத்தில் வேகமாக பரவும் தன்மையும் கொண்டுள்ளது என்றும், சீனாவில் உள்ள வூகான் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

நியோகோவ் அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது என்றும், இதனால் பாதிக்கப்படும் மூன்றில் ஒருவர் இறக்கின்றனர் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.இந்த நியோகோவ் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு வௌவால் இனத்தில் கண்டுபிடிக்கப்பட்டு விலங்குகளிடையே பரவுவதாக அறியப்பட்டுள்ளது. BioRxiv என்னும் இணையதளத்தில் வெளியான புதிய ஆய்வு ஒன்று நியோகோவ் மற்றும் அதன் நெருங்கிய தன்மை கொண்ட PDF-2180-CoV மனிதர்களை பாதிக்கலாம் என்பதைக் கண்டறிந்துள்ளது.

இதோடு சீனாவில் வுகான் பல்கலைக்கழகம் மற்றும் சைனீஸ் அகாடமி ஆப் சயின்ஸ் இன்ஷ்டிட்யூட் ஆப் பயோபிசிக்ஸ் ஆராய்ச்சிகளின் கூற்றுப்படி, மனித உயிரணுக்களில் வைரஸ் ஊடுருவுதற்கு ஒரு பிறழ்வு மட்டுமே தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளனர். மேலும் சுவாசக்கோளாறுகள் அல்லது நோய்த்தடுப்பு ஊசி போடப்பட்டவர்களுக்கு உற்பத்தியாகும் ஆன்டிபாடிகள் அல்லது புரத மூலக்கூறுகள் நியோகோவ் வைரசுக்கு எதிராக பாதுகாக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது. எனவே மக்களை எளிதில் பாதிக்காது என அலட்சியமாக இல்லாமல் விழிப்புணர்வோடு இருந்து நியோகோவ் வைரசுக்கு எதிராகப் போராட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

முன் தொற்று அல்லது பிற கரோனா வைரஸ்களின் தடுப்பூசிகளால் பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி, NeoCoV மற்றும் PDF-2180-CoV நோய்த்தொற்றுகளிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்க போதுமானதாக இருக்காது. ஏனெனில் SARS-CoV 2 அல்லது MERS-CoV எதிர்ப்பு ஆண்டிப்பாடிகள் தொற்றுநோயைத் தடுக்க முடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

click me!