Corona India: இன்று ஒரே நாளில் 2.35 லட்சம் பேருக்கு கொரோனா..நேற்றைவிட 6% குறைவு..மாநிலங்கள் வாரியான விவரம் ..

By Thanalakshmi VFirst Published Jan 29, 2022, 3:43 PM IST
Highlights

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2.35 லட்சம் பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2.51 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது. 
 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2.35 லட்சம் பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைவிட 6% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. அன்றாட பாசிடிவிட்டி ரேட், 15.88%ல் இருந்து 13.39% ஆகக் குறைந்துள்ளது. ( பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதன் விகிதம் ).இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை 165 கோடி ஆக உள்ளது. 

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்த தகுதி உடையோரில் 95% பேர் முதல் தவணை செலுத்திக் கொண்டனர். 74% பேர் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் 4,92,198 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 871 பேர் பலியாகினர்.

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று காணொலி வாயிலாக பிஹார், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மற்றும் சத்தீஸ்கர் மாநில சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா உயிரிழப்பு அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 103 பேர் உயிரிழந்தனர். நேற்று மட்டும் 24,948 பேருக்கு தொற்று உறுதியானது.

அதே போல் டெல்லியில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 4,044 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகியுள்ளது. பாசிடிவிட்டி விகிதம் 8.60% ஆக உள்ளது. தென்மாநிலங்களைப் பொறுத்தவரை கர்நாடகாவில் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது.அங்கு பரிசோதனை செய்யப்படும் மாதிரிகளில் 67.5% ஒமைக்ரான் வைரஸாக உள்ளது. 

கேரளாவை பொறுத்தவரை தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி அங்கு புதிதாக 54,537 பேருக்கு தொற்று உறுதியானது.வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை மிசோரத்தை தவிர மற்ற மாநிலங்களில் தொற்று குறைந்து வருகிறது. மிசோரத்தில் 2,064 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது.  உலகம் முழுவதும் அன்றாடம் சராசரியாக 20 லட்சம் பேருக்கு  தொற்று உறுதியாகிறது. இதுவரை 54 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக தொற்று குறைந்துள்ளது. தமிழகத்தில் நேற்று 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 32,79,284 ஆக உள்ளது.சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,20,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 30,29,961 ஆக உள்ளது.

click me!