இறந்தவருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட மருத்துவர்... சர்ச்சையில் சிக்கிய அதிகாரிகள்..

By Raghupati RFirst Published Dec 22, 2021, 8:41 AM IST
Highlights

ஜூன் மாதம் இறந்த நபருக்கு  இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டதால் சர்ச்சையில் சிக்கியிருக்கின்றனர் அரசு அதிகாரிகள்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க, இந்த ஆண்டு ஜனவரி முதல் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், ஜூன் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்களையும் அரசு நடத்தி வருகிறது. இதுவரை, 7. 77 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி போட அரசு கவனம் செலுத்தி வரும் நிலையில், காஞ்சிபுரத்தில் இறந்த ஒருவருக்கு தடுப்பூசி போட்டதற்கான சான்று வழங்கி, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம், விளக்கடி கோவில், துப்புல் தெருவைச் சேர்ந்தவர்  அன்பழகன்.இவருக்கு வயது 33 ஆகும்.  இவர் இந்த ஆண்டு ஜூனில், கொரோனா பாதிப்பால் இறந்தார். அவருக்கு, செப்டம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு மாதங்களில், பஞ்சுப்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு தவணைகளில் தடுப்பூசி போட்டதாக சான்றிதழ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

உயிருடன் இல்லாத நபர் ஒருவருக்கு, கொரோனா தடுப்பூசி போட்டது போல சான்றிதழ் வினியோகம் செய்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல்,  தடுப்பூசி போட்ட எண்ணிக்கையில் எந்த அளவுக்கு உண்மைத்தன்மை இருக்கும் ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இறந்தவருக்கு தடுப்பூசி போட்டதாக சான்று வழங்கியது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மருத்துவர் மற்றும் செவிலியரிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. உரிய பதில் வந்த பின், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இறந்த நபர் ஒருவருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!