சீனாவில் உருவான கொரோனாவை பற்றி முழு தகவல்களை சீன அரசு வெளியிட்டே ஆக வேண்டும் என்று சீனாவை எச்சரித்து இருக்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ்.
2019 டிசம்பரில் சீனாவின் வூகானில் பிறந்த ‘கொரோனா வைரஸ்’ இதுவரை 222 நாடுகளில் பரவி, மூன்று அலைகளை உருவாக்கி, பலகட்ட பொதுமுடக்கங்களைக் கொண்டுவந்து, உலக மக்களை முடக்கியது. சர்வதேசப் பொருளாதாரம் முடங்கியது. சாமானியரின் வாழ்வாதாரம் சரிந்தது. ஒட்டுமொத்த உலகத்தையே முடக்கியது. உலக நாடுகள் அனைத்தும் முழு ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியது. இருந்தாலும் 2-வது அலை, 3-வது அலை, 4-வது அலை என தொல்லை கொடுத்து வருகிறது.
கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, கொரோனா 3வது அலை வராமல் காக்க தற்போது உதவி புரிந்து வருகிறது. தற்போது கொரோனா வேரியண்ட் ஆன ‘ஒமைக்ரான்’ உலகத்தை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தற்போது உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தடுப்பூசிகளின் செயல்திறனை குறைத்து அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
சீனாவின் வுகான் ஆய்வு மையத்தில் இருந்துதான் வைரஸ் தொற்று பரவியது என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டின. ஆனால் சீனா குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தது. வல்லுனர்கள் சீனா சென்று ஆய்வு செய்தனர். அப்போது சீனா கட்டுப்பாடுகளை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெனீவா தலைமையக கட்டிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ‘ஒமைக்ரான், டெல்டா வகையை விட வேகமாக பரவி வருகிறது. இது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வல்லது. மேலும் கொரோனா நோயிலிருந்து மீண்டவர்களும், மீண்டும் ஒமைக்ரானால் பாதிக்கப்படலாம். கொரோனாவின் தோற்றத்தை கண்டறியும் வரை கடினமான நாட்களை கடந்துதான் ஆக வேண்டும். கொரோனா வைரசின் தோற்றம் குறித்த கூடுதல் தரவு மற்றும் தகவல்களை சீனா வெளியிட வேண்டும்’ என்று சீனாவை எச்சரித்து இருக்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்.