சென்னையில் இரண்டாம் அலை அதன் உச்சத்தை மே 12 அன்று எட்டியது. அன்றைய தினம் சென்னையில் அதிகபட்சமாக 7,564 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போது கொரொனா மூன்றாம் அலையில் சென்னையில் 8,218 பேர் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இரண்டாம் அலையில் ஒரு நாள் உச்சத்தை, மூன்றாம் அலை இன்று கடந்தது. சுமார் இரண்டு வார காலத்துக்குள் கொரோனா தொற்று சென்னையில் புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது.
நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை சுழன்றடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா மூன்றாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் டிசம்பர் 25 அன்று தினசரி பாதிப்பு 606 என்ற அளவில் இருந்தது. அன்று முதல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று, டிசம்பர் 31 அன்று 1155 என்ற அளவில் பதிவாகியிருந்தது. தொடர்ந்து மூன்றாம் அலை தீவிரமாக பரவத் தொடங்கி, ஜனவரி 13 நிலவரப்படி தமிழகத்தில் 20,911 என்ற அளவில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் பதிவாகியுள்ளது. இதேபோல சென்னையிலும் கொரோனா வைரஸின் மூன்றாம் அலை தன்னுடைய கோர முகத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறது.
undefined
டிசம்பர் 25 அன்று சென்னையில் கொரோனா வைரஸ் பரவலின் ஒரு நாள் பாதிப்பு 165 என்று இருந்தது. அது டிசம்பர் 31 அன்று 589 என்று உயர்ந்தது. ஜனவரி 7 அன்று சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4,531 என்று ஒரு வாரத்தில் 9 மடங்கு அதிகரித்தது. அந்த எண்ணிக்கை தற்போது இரண்டு மடங்காக அதிகரித்து ஜனவரி 13 அன்று தினசரி பாதிப்பு 8,218 என்ற அளவில் பதிவாகியுள்ளது. தற்போது பொங்கல் திருநாளுக்காக தமிழகம் முழுவதும் பண்டிகைக் கூட்டம் அதிகரித்துள்ளது. எனவே, பொங்கல் திருநாள் முடிந்த பிறகு இந்த எண்ணிக்கை இன்னும் எகிறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னையைப் பாடாய்படுத்திய கொரோனா இரண்டாம் அலை உச்சத்தை மூன்றாம் அலை இன்று கடந்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது. சென்னையில் இரண்டாம் அலை அதன் உச்சத்தை மே 12 அன்று எட்டியது. அன்றைய தினம் சென்னையில் அதிகபட்சமாக 7,564 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போது கொரொனா மூன்றாம் அலையில் சென்னையில் 8,218 பேர் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்மூலம் சென்னையில் கொரோனா பரவல் தொற்று புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது. முதல் அலையில் சென்னையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத நிலையில், இரண்டாம் அலையில் சென்னை பெரும் பாதிப்பைச் சந்தித்தது.
இரண்டாம் அலை தொடங்கிய சில நாட்களிலேயே கொரோனா தொற்றுகள் அதிகரித்ததால், மருத்துவமனைகள் நிரம்பி கிடந்தன. சென்னை நகரில் எல்லா நேரமும் ஆம்புலன்ஸின் அலறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் ஆம்புலன்ஸ்கள் வாசலுக்கு வெளியே வரிசைக் கட்டி நின்றன. ஆனால், கொரோனா மூன்றாம் அலை புதிய உச்சத்தை அடைந்தபோதும் இரண்டாம் அலையில் இருந்தது போன்ற சிக்கல்கள் எதுவும் எழவில்லை. அதேவேளையில் சென்னை மருத்துமனைகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான படுக்கைகள் தற்போது காலியாக கிடக்கின்றன. கொரோனா தொற்று தீவிரமாகப் பரவினாலும் அதன் பாதிப்பு தீவிரமாக மாறாததற்கு தடுப்பூசி செலுத்தியது முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.