Omicron : ஈரோட்டில் மீண்டும் தலைதூக்கும் "கொரோனா".. வெளிநாடுகளில் இருந்து வந்த அந்த 146 பேர் ? அடுத்து என்ன ?

By Raghupati RFirst Published Dec 27, 2021, 12:43 PM IST
Highlights

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஈரோட்டில் கொரோனா தலை தூக்குவதால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திலும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதை அடுத்து மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசிகள் போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், வெளி நாடுகளில் இருந்து வரும் பயனாளிகள் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தியும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் வருகின்றனர். 

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘தமிழ்நாடு முழுவதும் இதுவரை 97 பேருக்கும் ஒமிக்ரான் அறிகுறி உள்ளது.  தமிழ்நாட்டிலும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 34  பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ஒமிக்ரான் பரிசோதனை முடிவுகள் மத்திய அரசிடம் இருந்து வருவது தாமதமாகிறது’ என்று கூறினார்.

இந்நிலையில், பல்வேறு வெளி நாடுகளில் இருந்து இதுவரை 280 பேர் ஈரோட்டுக்கு வந்துள்ளனர்.  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதில், 134 பேருக்கு 14 நாட்கள் தனிமை முடிந்ததால் அவர்களுக்கு மட்டும், 2-வது கட்டமாக சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அவர்கள் அனைவருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என முடிவு வந்துள்ளது. இதையடுத்து இவர்கள் அனைவரும் வழக்கம்போல் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

மேலும், 146 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு 14 நாட்களுக்கு பிறகு 2-வது கட்ட கொரோனா பரிசோதனை செய்யப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.மேலும், ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 5 ஆயிரத்து 798 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 42 பேருக்கு தொற்று உறுதியானது. இந்தநிலையில் நேற்று புதிதாக 41 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 563 ஆக உயர்ந்தது. இதுவரை 1 லட்சத்து 6 ஆயிரத்து 329 பேர் குணமடைந்து உள்ளனர். இதில் நேற்று மட்டும் 54 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள். தற்போது 524 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 710 பேர் பலியாகி உள்ளனர். ஈரோட்டில் மீண்டும் கொரோனா தலை தூக்குவதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

click me!