இன்னிக்கு மறக்காம குத்திக்குங்க… 7வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்…

By manimegalai aFirst Published Oct 30, 2021, 7:50 AM IST
Highlights

தமிழகத்தில் 7வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி உள்ளது.

சென்னை: தமிழகத்தில் 7வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கி இறங்கி இருக்கிறது. தொடக்க காலங்களில் நாள்தோறும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் பின்னர் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டன.

கொரோனா தடுப்பு வழிமுறைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் என தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன் எடுக்கப்பட்டன. இதுவரை தமிழகத்தில் 6 கட்டமாக கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடத்தப்பட்டு உள்ளது.

வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த முகாம்களில் ஆர்வத்துடன் மக்கள் திரண்டு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தொடக்கத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அதன் பின்னர் அசைவம் சாப்பிடுபவர்கள், குடிமகன்களுக்காக இந்த முகாம் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது.

6வது கட்ட தடுப்பூசி முகாம்கள் மூலமாக இதுவரை 1.33 கோடி பேர் ஊசி போட்டுக் கொண்டுள்ளனர். இன்னும் 60 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. அவர்கள் யார், யார் என்று கண்டறியும் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

இந் நிலையில் 7வது கட்டமாக தமிழகம் முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பூங்காக்கள், ரயில் நிலையங்கள், மக்கள் கூடும் முக்கியமான இடங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.

தமிழகம் முழுவதும் மொத்தமாக 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னையில் மட்டும் 1600 இடங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தடுப்பூசி செலுத்தாமல் இருக்கும் 60 லட்சம் பேர் தான் இன்றைய முகாமின் முக்கிய இலக்கு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி செலுத்தும் பணியில் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டு உள்ளனர்.

காலை 7 மணிக்கு தொடங்கி உள்ள தடுப்பூசி போடும் பணிகள் இரவு 7 மணி வரை நடைபெறும். 18 வயது கடந்தவர்களுக்கு 45 லட்சம் தடுப்பூசிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 7வது முகாமில் 2 டோஸ் தடுப்பூசி போடுவதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. நாளைக்கு பதில் இன்று முகாம் செயல்படுவதால் முகாம் பணியாளர்களுக்கு நாளை விடுமுறை விடப்பட்டு உள்ளது. எனவே தடுப்பூசி மையங்கள் நாளை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக கடந்த 23ம் தேதி நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் 22.33 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!