இந்தியாவில், தினசரி கொரோனா பாதிப்பு மூன்றாவது நாளாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3.06 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
புதிதாக கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறிப்பட்டது. இதையடுத்து மீண்டும் கொரோனா பாதிப்பு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்து வரும் நிலையில், இந்தியாவிலும் ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்து கிடுகிடுவென பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து காணப்படுகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று பதிவான பாதிப்பு எண்ணிக்கையானது, நேற்றைய பாதிப்பான 3,33,533 மற்றும் நேற்று முன்தின பாதிப்பான 3,37,704 -ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 95 லட்சத்து 43 ஆயிரத்து 328 ஆக அதிகரித்துள்ளது.
undefined
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,43,495 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 68 லட்சத்து 4 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 93.07 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 22 லட்சத்து 49 ஆயிரத்து 335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 5.69 சதவீதமாக உள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 439 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 ,89,848 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 14,74,753 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 71.69 கோடி கோவிட் பரிசோதனைகள் (71,69,95,333) செய்யப்பட்டுள்ளன. வாராந்திரத் தொற்று விகிதம் 17.03 சதவீதமாகவும் தினசரித் தொற்று விகிதம் 20.75 சதவீதமாக பதிவாகியுள்ளது.
அதேவேளையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 27 லட்சத்துக்கும் அதிகமாக (27,56,364)) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி நிலவரப்படி நாடு முழுவதும் இதுவரை 162 கோடியே 26 லட்சத்து 7 ஆயிரத்து 516 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதில், 93 கோடி பேருக்கு மேல் முதல் தவணையும், 68.4 கோடி பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. 15 முதல் 17 வயதுப் பிரிவைச் சேர்ந்த சிறார்களில், 4.19 கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.