Pankaj Udhas : கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ், கடந்த சில காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று பிப்ரவரி 26ம் தேதி காலமானார். இந்த செய்தியை அவரது மகள் நயாப் உதாஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
யார் இந்த பங்கஜ் உதாஸ்
ஹிந்தி திரையுலகில் எண்ணற்ற பாடல்களை பாடி மக்கள் மனதை கவர்ந்த மிகசிறந்த பாடகர் தான் பங்கஜ் உதாஸ். குஜராத்தில் உள்ள ஜெட்பூரில் பிறந்த பங்கஜ் அவர்கள், மூன்று சகோதரர்கள் கொண்ட குடும்பத்தில் கடைக்குட்டியாவார். இவரது பெற்றோர் கேசுபாய் உதாஸ் மற்றும் ஜிதுபென் உதாஸ் ஆகியோர் ஆவர். பங்கஜ் அவர்களின் மூத்த சகோதரர் மன்ஹர் உதாஸ் பாலிவுட் படங்களில் ஹிந்தி பின்னணி பாடகராக சிறந்து விளங்கியவர்.
அதே போல பங்கஜ் அவர்களின் இரண்டாவது அண்ணனும் ஒரு கசல் பாடகராவார். குஜராத்தில் இருந்து பங்கஜ் அவர்களின் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தபோது அங்குள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பயின்றுள்ளார். அதன் பிறகு இளைய சகோதரரோடு சேர்ந்து மேடைகளில் பாடல்களை பாட துவங்கியுள்ளார் பங்கஜ் உதாஸ், அப்போது இவருக்கு சன்மானமாக 51 ரூபாய் கொடுப்பார்களாம்.
கடந்த 1970ம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மற்றும் நடிகை ஹேமா மாலினி நடிப்பில் வெளியான ஒரு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பங்கஜ் உதாஸ் பலநூறு பாடல்களை பாலிவுட் உலகில் பாடியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு வரை அவர் திரையிசை மற்றும் கசல் கச்சேரிகளை அரங்கேற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த ஜனாதிபதி அய்யா அப்துல் காலம் கைகளால் பத்ம ஸ்ரீ பட்டம் பெற்ற பங்கஜ், தனது 46 ஆண்டுகால இசை பயணத்தில் பலநூறு விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 1994ம் ஆண்டு இவருக்கு அமெரிக்காவின் லுபாக் டெக்சாஸின் கௌரவ குடியுரிமையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று பிப்ரவரி 26ம் தேதி காலமானார்.