’பிகில்’ என்ன மொழி வார்த்தைன்னு யாராவது சொல்லுங்க?’...சந்தேகம் எழுப்பும் விடுதலைச் சிறுத்தைகள்...

By Muthurama LingamFirst Published Jun 22, 2019, 10:10 AM IST
Highlights

’பச்சைத் தமிழராகிய விஜய் ‘பிகில்’என்று புரியாத மொழியில்தான் பெயர் வைக்கவேண்டுமா?’ என்று அவரது பிறந்த நாள் வாழ்த்தோடு கொஞ்சம் கண்டனமும் கலந்துகொடுத்திருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு.
 


’பச்சைத் தமிழராகிய விஜய் ‘பிகில்’என்று புரியாத மொழியில்தான் பெயர் வைக்கவேண்டுமா?’ என்று அவரது பிறந்த நாள் வாழ்த்தோடு கொஞ்சம் கண்டனமும் கலந்துகொடுத்திருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு.

இது குறித்து இன்று தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள அவர்,...இந்தி திணிப்பை போல சினிமாக்காரர்கள்  வேண்டுமென்றே தமிழ் படங்களில் பிற மொழி பெயர்களை திணிக்கிறார்கள்.
சர்க்கார், டகால்டி, 
மான்ஸ்டர், மெட்ராஸ், 
தில்லுக்கு துட்டு, கூர்கா என்று 
தொடருகிறது.இது மிக ஆபத்தான போக்கு. தமிழ் நாட்டில் வெளியிடக்கூடிய திரைப்படங்கள் தாய்மொழியான தமிழை தாங்குவதில் என்ன கவுரவ குறைவாகப்போகிறது?

தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் தமிழ் நாட்டில் தீவிரமாக செயல்பட்டபோது, அதன் தலைவர் டாக்டர் திருமாவளவன் அவர்கள் தமிழ் நாட்டில் வெளியிடப்படும் திரைப்படங்களுக்கு தமிழிலேயே பெயர் சூட்டவேண்டும் என்று போராடினார். அப்போது,அவரோடு இணைந்து பணியாற்றிய டாக்டர் ராமதாஸ், அய்யா நெடுமாறன், டாக்டர் சேதுராமன் உள்ளிட்டோரும் இதே குரலை எதிரொலித்தனர். அன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் தமிழ் மொழி தாங்கியே வந்தன.இதையடுத்து அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழ் பெயர் சூட்டப்பட்ட திரைப்படங்களுக்கு வரிச்சலுகையும் அறிவித்தார்.

ஆனால் இன்றைக்கு வரும் திரைப்படங்கள் பிற மொழி பெயர் தாங்கி வருவது ஆபத்தானதாகும்.அதுவும் நடிகர் விஜய் ஒரு பச்சைத்தமிழர். அவரது படமான  இந்த ‘பிகில்’ என்ன மொழியென்றும் தெரியவில்லை. அவரது பிறந்த நாளில் அறிவிக்கும் அறிவிப்பு தாய் மொழியலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அடுத்தடுத்து தமிழில் அறிவிப்பார் என்று நம்புவோம். பிறந்த நாள்  வாழ்த்துக்களோடு இந்த கோரிக்கையையும் வைக்க கடமை பட்டுள்ளோம். திரைப்படங்களின் மூலம் புகழையும் செல்வாக்கையும் வளர்க்க நினைப்பவர்கள் கொஞ்சம் தாய்மொழியையும் வளர்க்க முனைவது நல்லது’என்று பதிவிட்டிருக்கிறார் வன்னி அரசு.
 

click me!