
’அங்காடி தெரு’ வெற்றிக்குப் பிறகு ‘அரவான்’,’காவியத் தலைவன்’ என்ற இரு தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்த இயக்குநர் வசந்த பாலன் ‘அர்ச்சுனா இம்முறை உன் இலக்கு தப்பாது’ என்று தனது ‘ஜெயில்’ படத்தைப் பற்றி முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
‘வெயில்’ படத்தில் இதே வசந்த பாலனால் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்ட ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்து அவரே இசையமைக்கும் ‘ஜெயில்’ படத்தை வசந்த பாலன் இயக்கி முடித்திருக்கிறார். இதன் பின்னணி இசைக்கோர்ப்பு தற்போது நடந்து வருகிறது.
இது குறித்து தனது முகநூல் பதிவில் எழுதியுள்ள வசந்த பாலன், ...ஜெயில் திரைப்படத்தின் கடைசி ரீலுக்கான பின்னணி இசை எழுதும் வேலை இன்றிரவு இப்போது தான் முடிந்தது.இப்போது தான் வீடு திரும்பி நீர்மையின் கைகளில் என்னை நான் ஒப்படைத்து விட்டு அமர்கிறேன்.ஜீவியின் விரல்களில் வழிந்த இசை என் ஆழ்மன உணர்ச்சியை ஆழம் பார்த்தது.ரசிகனையும் விடாது. தவிர்க்கமுடியாத விசையொன்றால் ஈர்க்கப்படுபவனைப்போல் இசையின் சுழற்சியில் மனம் முன்னும் பின்னும் பம்பரமாய் சுழன்றாடியது.
காட்சியும் இசையும் ஒன்றையொன்று புதுமணத் தம்பதி போல கைகோர்த்து கொண்டு என் முன் உலாவர கண்ணீர் என்னையறியாமல் விழியில் வழிந்தது.மிக அழுத்தமாக காட்சி பிம்பம் அந்த பிம்பத்தின் உணர்ச்சி இருமடங்காக ஆக்கும் இசை. என் இசையின் மொழி ஜீவிக்கு எளியதாக புரியும்.இப்போது கிளைமாக்ஸ் காட்சியை பார்க்கையில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தது.
பின்னணி இசை கோர்ப்பு வேலைகள் பம்பாயில் முடிவுற்று முழுப்படத்தை பார்க்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன். மனதால் ஜீவியை இறுக அணைத்து கொண்டேன்.இந்த முறை அர்ச்சுனா உன் இலக்கு தப்பாது என்று மனம் சொன்னது.காலதேவன் துணையிருக்கட்டும்.இசை இருபுறங்களிலுமாக மாறி மாறி ஒலித்து உளமயக்கை உருவாக்கியது.மனம் கொந்தளிப்பு அடங்கியது.ஜெயில் தன்னுடலையே சிறகாக்கிக்கொண்டு பறக்கும் நாளுக்காய் காத்திருக்கிறது. ஜெயில் தன் விடுதலையை தானே தேடிக்கொள்ளும்’ என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.