பொன்மணி அன்போடு... வைரமுத்துவின் மனைவிக்கு அவரது தோழி எழுதிய கடிதம்!

By vinoth kumarFirst Published Oct 18, 2018, 4:56 PM IST
Highlights

திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி பாலியல் குற்றம்சாட்டிய நிலையில், அவருக்கு எதிராக பல பெண்கள் பாலியல் புகார் கூறி வருகின்றனர்.

திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி பாலியல் குற்றம்சாட்டிய நிலையில், அவருக்கு எதிராக பல 
பெண்கள் பாலியல் புகார் கூறி வருகின்றனர். வைரமுத்துவுக்கு எதிரான புகாருக்கு பலர் ஆதரவும், பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். நான் நல்லவனா? கெட்டவனா? என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும் என்றும் பாடகி சின்மயின் குற்றச்சாட்டுக்கு வைரமுத்து மறுப்பும் தெரிவித்திருந்தார்.

  

இந்த நிலையில், கவிஞர் வைரமுத்துவின் மனைவி பொன்மணிக்கு அவரது கல்லூரி தோழி ஒருவர் கடிதம் ஒன்றை எழுதியதாக இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்மயியை தன் அறைக்கு அனுப்புமாறு வைரமுத்து சொன்னதாக, அவரது தாயார் சொல்கிறார்... இவ்வளவு பெரிய விஷயத்தை எந்த தாயும் பொய்யாக கூறமாட்டார்கள். எனவே அவர்கள் படும் வேதனைக்காவது நீ வாய் திறக்க வேண்டும்... உன் கணவனின் சுயரூபத்தை வெளிப்படுத்து என்ற வகையில் அந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதோ அந்த கடிதம்...

என் அன்புக்கினிய தோழி பொன்மணிக்கு, உன் கல்லூரித் தோழி எழுதிக் கொள்வது.  நீ நலமா? உன் காதல் திருமணத்திற்குப்பின் சில காலம் மட்டுமே உன்னோடு தொடர்பில் இருந்தேன். இப்பொழுது நடக்கும் விஷயங்களைக் கேள்விப்பட்டு அதிர்ந்து இந்தக் கடிதத்தை நான் உனக்கு எழுதுகிறேன். பொன்மணி வைரமுத்து என்கிற பெயர் பொருத்தமே அன்று நாங்கள் எல்லாரும் உன் திருமண உறவை போற்றிப் பாராட்ட இயற்கை கொடுத்த வசந்த தோரணமாக நினைத்தோம். பெற்றோர்களை எதிர்த்து இரு கவிஞர்களின் நிறைவேறிய காதல் லைலா-மஜ்னு, அம்பிகாபதி-அமராவதி, ரோமியோ-ஜூலியட் காதல்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளியது.  

உங்களது காதலில் பிரிவில்லை, மரணமில்லை திருமணத்தில் முடிந்தது. அன்றுவரை பிறந்த வீட்டில் ராணியாகவே வாழ்ந்திருந்தாலும் திருமணத்திற்குப் பின் ஒண்டிக்குடித்தனத்தில் தட்டுமுட்டு சாமான்களை வைத்து குடும்பம் நடத்துவதிலும் நீ மகிழ்ச்சியாகவே இருந்தாய். காதல் கணவரின் இதய சிம்மாசனத்தில் ராணியாக இடம் பெற்றதால்! பேராசிரியராக பாடம் புகட்டி உன் தமிழறிவை இளம் குருத்துகளுடன் பகிர்ந்து கொண்டே, குடும்பத்திற்கான பொருள் ஈட்டினாய். உன் காதல் கணவன் கலைத்துறையில் கால் பதிக்க உன்னால் முடிந்த தியாகங்களை செய்தாய். 

அதற்கு நன்றிக் கடனாய் உன் கணவரும் தான் சினிமாவிற்கு எழுதிய முதல் பாடலை உன் பெயருடன் சுபமாக ஆரம்பித்தார். பொன்மாலைப் பொழுது இது ஒரு பொன்மாலைப் பொழுது. உன் மூத்த மகனை ஈன்றதும் அப்பொழுது தானே?அழகான இரு மகன்களுடன் இனிய இல்லறம் நடைபெற்று வரும்போது எப்பொழுது உன் கணவர் தடம் மாறினான்? சினிமாவில் புகழ் சேர்ந்த பின்னா? நிறைய பணம் சேர்ந்த பின்னா? இல்லை அரசியல் தொடர்புடன் வந்த செல்வாக்கிற்கு பின்னா? உன் அறிவிற்கும் ஞானத்திற்கும் இந்த ஆணைவிட வேறு சிறந்த ஆண் கிடைத்திருப்பார். ஆனால் உன் அன்பு இவருக்கே என்று ஆன பிறகு வேறு என்ன யார் சொல்லி உன் மனத்தை மாற்றியிருக்க முடியும். 

அப்படிப்பட்ட உன் அன்பை எப்படி உதாசீனம் செய்தார்? உன் மேதா விலாசக் கவிதைகள் அனைத்தும், உன் அற்புத கவித்திறமை அனைத்தும் உன்னை அறிந்தோர் அறிவர்! திருமணத்திற்குப் பிறகு உன் திறமை குடத்திலிட்ட விளக்காக உன் புகழ் குன்றின்மேல் ஏறாமல் இருந்து விட்டது. அதற்கு யார் காரணம்? போகட்டும் அது கூடப் பரவாயில்லை. ஆனால் உனக்குத் துரோகம் இழைக்க அவனுக்கு எப்படி மனம் வந்தது. பிறந்த வீட்டை முற்றும் பகைத்துக் கொண்டு அவரே எல்லாம் என்று வந்த உனக்கு எப்படி நம்பிக்கைத் துரோகம் செய்யத் துணிந்தார்? நண்பர்கள் உதவியுடன் ஆரம்பித்த எளிய வாழ்க்கையை அவர் மறந்து விட்டாரா? உன் தியாகங்களை எப்படி மறந்து, பிற பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள முடிந்தது? அதை எப்படி பொறுமையுடன் நீ எதிர்கொண்டாய்? அன்பும் அமைதியும் தவழும் உன் அழகிய முகம் வாடுவது காதல் 
மனைவிக்கு செய்யும் துரோகம் என்று அவருக்குத் தெரியவில்லையா? 

நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமான பாரதி சொன்ன புதுமைப்பெண்ணின் எடுத்துக்காட்டாக விளங்கிய நீ எப்படி அடங்கிப் 
போனாய்? குடும்ப அமைதிக்காகவா? இல்லை பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவா?  ஏதுவாக இருந்தாலும் நீ துணிந்து பேசும் காலம் வந்து விட்டது. உன்னை வழி நடத்தும் சாய்பாபா தான் உனக்கு துணிச்சலைக் கொடுத்து இப்பொழுது பலரும் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு உண்மையான பதில் சொல்ல வைக்க வேண்டும். கண்ணகி கதை  சிலப்பதிகாரத்தோடு போய் விடவேண்டுமா? நீ பாடம் எடுக்கும் வகுப்பில் வெளியே நின்று கேட்டு உன் தமிழ் மேன்மையை அனுபவித்த பலருள் ஒருத்தியாக நான் கேட்கிறேன். நீதி நேர்மைக்காக உண்மையை உரக்க சொல்ல முடியவில்லையா உன்னால்? முடியும் என்றே நம்புகிறேன். எனக்குத் தெரிந்த பொன்மணி நேர்மை மிக்கவர். வயதுக்கும் திறமைக்கும் அதிகம் மரியாதை கொடுப்பவர். பொய் பேசாதவர். 

பாடகி சின்மயி வைத்திருக்கும் குற்றச்சாட்டு மிகப்பெரியது. அவருடைய அம்மா சின்மையியை தன் அறைக்கு அனுப்புமாறு வைரமுத்து 
சொன்னதாக சொல்கிறார். இவ்வளவு பெரிய விஷயத்தை எந்தத் தாயும் பொய்யாக சொல்லமாட்டார்கள். அவர்கள் படும் வேதனைக்காவது நீ வாய் திறக்க வேண்டாமா? அவர் அம்மா அளித்த பேட்டியின் காணொளி பார்க்கவில்லை என்றால் பார்க்கவும்.

இதுகாறும் பொறுமையாக வாழ்ந்து பூமாதேவி என்று பெயரை நீ பெற்றிருப்பினும் அந்தப் பூமியில் தான் உன் கணவரால் இம்சிக்கப்பட்ட மற்ற பெண்களும் வாழ்கிறார்கள். உன்னால் அவர்களுக்கு உதவ முடியும். யோசித்துப் பார். கணவருடன் பேசாமல் இருந்து மட்டும் எதிர்ப்பைப் பதிவு செய்வதை விட ஆக்கப்பூர்வமாக #MeToo-வில் வைரமுத்துவின் பாலியல் கொடுமைகளைப் பதிவிடும் பெண்களின் குறைகளுக்கு செவிமடுத்து உன் கணவனின் சுயரூபத்தை வெளிப்படுத்து. 

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்பது அந்தக் காலம். வைரமுத்துவைப் பற்றி நீ உண்மையை சொன்னால் உன் மகன்களின் ஆதரவு உனக்குக் கண்டிப்பாக இருக்கும்.பல பெண்களை அவர் பிடியில் இருந்து காப்பாற்றியிருக்கிறாய் என்று கேள்விப்படுகிறேன். அப்படிப்பட்ட தாயுள்ளம் கொண்ட நீ  இப்பொழுது வெளிப்படையாக அவரைப் பற்றி சொன்னால் பாதிக்கப்பட்ட பலருக்கும் ஆறுதலாக இருக்கும்.  செய்யும் துணிச்சலும் நேர்மையும் உன்னிடம் இன்னும் உள்ளது என்று நம்புகிறேன்.

பாபா என்ன சொல்கிறாரோ அப்படியே செய்யவும். ஆனால் உண்மை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல் இருப்பதும் பொய்யுரைப்பது தான். ஓம் ஸ்ரீ சாய் ராம் அன்புடன் உன் தோழி பொன்மணி வைரமுத்துவின் தோழி எழுதியதாக கூறப்படும் இந்த கடிதம் உண்மைதானா? அல்லது பொன்மணியின் தோழி பெயரில் யாரோ ஒருவரால் எழுதி வெளியிட்டதா? என்ற சந்தேகம் எழாமல் இல்லை...!

click me!