தளபதி விஜய் தற்பொழுது தனது லியோ படத்தின் படபிடிப்பு பணிகளை முழுமையாக முடித்துள்ள நிலையில், எஞ்சி இருந்த டப்பிங் பணிகளையும் அவர் முடித்து தற்போது வெளிநாட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த சில கால ஓய்வுக்கு பிறகு, அவர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தனது 68வது திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். நடிப்புக்கு இடையில் தனது விஜய் மக்கள் இயக்கம் கட்சியின் பணிகளையும் தொடர்ச்சியாக கவனித்து வருகிறார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள ஒரு சிறிய தகவலின்படி, கடந்த 2002ம் ஆண்டு வெளியான விஜயின் பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து, திரைத்துறையில் அறிமுகமான நடிகர் ஜெய் அவர்கள் தளபதி 68 திரைப்படத்திலும் அவருக்கு தம்பியாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆகவே தளபதி 68 திரைப்படம், பகவதி பாணியில் இருக்குமோ என்ற எண்ணங்களும் தற்போது தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முன்பு ஒரு முறை ஒரு பேட்டியில் பேசிய வெங்கட் பிரபு, விஜய் அவர்களை வைத்து ஒரு ஏலியன் கதை எடுக்க ஆசைபடுவதாக கூறியதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே தளபதி விஜயை வைத்து வெங்கட் பிரபு எந்த வகையிலான கதையை எடுக்கவிருக்கிறார் என்பது குறித்து அவருடைய ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். நிச்சயம் தளபதி 68 படத்தின் அப்டேட் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று இன்று வெங்கட் பிரபு ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த ஆண்டு ஜெய் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியான நிலையில், அவருடைய நடிப்பில் மேலும் 5 படங்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.