எல்லா கோட்டையும் அழிங்க... முதலில் இருந்து ஆரம்பிக்கும் சிபிஐ... சுஷாந்த் மரண வழக்கில் பரபரப்பு திருப்பம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 21, 2020, 11:44 AM IST
Highlights

மூன்றாவதாக தடவியல் நிபுணர்களைக் கொண்ட குழு, சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் பிளாட்டிற்கு சென்று முழுமையாக மீண்டும் தடயங்களை ஆராயும் பணிகளில் ஈடுபடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலிவுட்டின் வாரிசு நடிகர்கள், நடிகைகள் கொடுத்த அழுத்தத்தால் சுஷாந்த் சிங் கைவசம் இருந்த அனைத்து படவாய்ப்புகளும் கைவிட்டு போனதாகவும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தமே அவருடைய தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. நடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒன்றரை மாதம் ஆன நிலையில் தற்போது அவரின் தந்தை கே.கே.சிங், சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக ரியா சக்ரபர்த்தி மீது புகார் கூறியிருந்தார். 

 

 

இதையடுத்து தற்கொலைக்கு உதவுதல், தவறாக வழிநடத்துதல், தவறான கட்டுப்பாடு, வீட்டில் திருட்டு, மோசடி, கிரிமினல், நம்பிக்கையை மீறிய செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பீகார் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர்.  மேலும் அந்த புகாரில் ரியா தன் மகனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 கோடி வரை மாற்றியுள்ளதாகவும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி யுள்ளதாகவும் குற்றச்சாட்டியிருந்தார். மொத்தமாக சுமார் 50 கோடி வரை ரியா சக்ரபர்த்தி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 7ம் தேதி ரியா சக்ரபத்தி அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். 

 

 

இதனிடையே பீகார் போலீசார் பதிந்துள்ள வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி ரியா சக்ரபர்த்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என்று, வழக்கு விவரங்களை மும்பை போலீஸ், சிபிஐக்கு வழங்க வேண்டும் என்றும் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

 

இதையடுத்து நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் மும்பை வந்தடைந்தனர். தற்போது மும்பையில் உள்ள டிஆர்டிஓவின் சாண்டா குரூஸ் விருந்தினர் மாளிகையில் சிபிஐ குழு தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

 

சிபிஐ எஸ்.பி. நுபுர் பிரசாத் தலைமையில் விசாரணை குழு 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. மும்பை காவல்துறையினர் கைவசம் உள்ள தடவியல் ஆவணங்கள், பிரேத பரிசோதனை ஆகியவற்றை ஒரு குழுவும், காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் உள்ள நபர்கள் குறித்து மற்றொரு குழுவும் விசாரணை நடத்த உள்ளது. 

 

 

மூன்றாவதாக தடவியல் நிபுணர்களைக் கொண்ட குழு, சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் பிளாட்டிற்கு சென்று முழுமையாக மீண்டும் தடயங்களை ஆராயும் பணிகளில் ஈடுபடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ரியா சக்ரபர்த்தி உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய நபர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகளும் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளதால் பாலிவுட்டில் பரபரப்பு தொற்றியுள்ளது. 
 

click me!