“சூரரைப் போற்று” பணத்திலிருந்து அள்ளிக்கொடுத்த சூர்யா... கல்வி உதவிக்காக இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கீடு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 31, 2020, 06:50 PM IST
“சூரரைப் போற்று” பணத்திலிருந்து அள்ளிக்கொடுத்த சூர்யா... கல்வி உதவிக்காக இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கீடு...!

சுருக்கம்

கடலளவு தேவைகள் மிகுந்துள்ள தருணத்தில் இந்தப் பங்களிப்பு சிறுதுளிதான். இருப்பினும் இது சகோதர உணர்வுடன் கூடிய அன்பின் வெளிப்பாடாக அமையும் என நம்புகிறேன். 

இறுதிச்சுற்று படப்புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் மாதம் 31ம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆக உள்ளது. அதன்  விற்பனை தொகையிலிருந்து ரூ. 5 கோடியை தேவைப்படுவோருக்கு நிதியாக வழங்க உள்ளதாக சூர்யா அறிவித்திருந்தார். அதன்படி முதற்கட்டமாக ரூ.1.5 கோடிக்கான தொகை திரையுலகினருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. திரைத்துறை தொழிலாளர்களின் அமைப்பான பெப்ஸிக்கு ரூ.80 லட்சம் ரூபாயும், இயக்குநர்கள் சங்கத்திற்கு ரூ.20 லட்சம் ரூபாயும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ரூ.30 லட்சமும், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.20 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக களத்தில் போராடி வரும் முன்களப் பணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். "'ஈதல் இசைபட வாழ்தல்' என்பதே தமிழர் வாழ்க்கை நெறி. நாம் உண்ணும்போது அருகில் இருப்பவர்களுக்கு ஒரு 'கைப்பிடி' அளவேனும் இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறது திருமந்திரம். கடுமையாக உழைத்து முன்னேறிய நிலையில் இருந்தவர்கள் கூட, திடீரென வாழ்வாதாரம் இழந்துள்ளனர். ஒவ்வொரு குடும்பமும் அடிப்படைத் தேவைகளுக்கே சிரமப்படும் நிலையில், மாணவர்களின் கல்விக்குப் பெரிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது.

பொதுமக்கள், திரைத்துறையினர், கொரோனா தொற்றிலிருந்து' மக்களைப் பாதுகாக்கச் செயல்பட்டவர்கள் ஆகியோருக்கு 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் விற்பனைத் தொகையிலிருந்து ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிப்பதாக அறிவித்திருந்தோம். அதில் பொதுமக்கள் மற்றும் தன்னலமின்றி 'கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு' பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற மருத்துவத்துறை பணியாளர்கள் மேலும் பொதுநல சிந்தனையுடன் கொரோனா பணியில் களத்தில் நின்று பணியாற்றிய காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், தூய்மை பணியாளர்கள், மயான பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு 2.5 கோடி ரூபாயை கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்திருக்கிறோம்.

ஐந்து கோடி ரூபாயில் 2.5 கோடி ரூபாய் எனது திரைக்குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு சிறு பங்களிப்பாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. அதில் 1.5 கோடி ரூபாய் திரைப்படத் தொழிலாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சங்க அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது. மேலே குறிப்பிட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் அல்லாத, திரையுலகைச் சார்ந்த அன்புக்குரிய விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், மக்கள் தொடர்பாளர்கள் (PRO), திரையரங்க தொழிலாளர்கள் மற்றும் எனது நற்பணி இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் குடும்பத்தில் பள்ளி/கல்லூரியில் பயில்கிறவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

'கல்வியே ஆயுதம்; கல்வியே கேடயம்' என்கிற அடிப்படை கொள்கையோடு இயங்கும் அகரம் ஃபவுண்டேஷன் அமைப்பின் வழிகாட்டுதலோடு, கல்வி ஊக்கத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். அதிக பொருளாதார தேவையுள்ள குடும்பத்திலிருந்து ஒரு மாணவ/மாணவிக்கு மட்டும், கல்விக் கட்டணமாக அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். சான்றுகளின் அடிப்படையில் அது நேரடியாக மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்படும்.

அகரம் வடிவமைத்துள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து, அஞ்சல் மூலமாக அகரம் ஃபவுண்டேஷன் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் கூறியுள்ள வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றி உதவித் தொகைக்கான தேர்வு அமையும். www.agaram.in இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடலளவு தேவைகள் மிகுந்துள்ள தருணத்தில் இந்தப் பங்களிப்பு சிறுதுளிதான். இருப்பினும் இது சகோதர உணர்வுடன் கூடிய அன்பின் வெளிப்பாடாக அமையும் என நம்புகிறேன். இந்தப் பேரிடர் காலத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மாணவர்கள் கல்வியைப் பாதியில் கைவிடுவதாக யுனஸ்கோ அறிவித்திருக்கிறது. இந்தத் தருணத்தில் பொருளாதார நெருக்கடியால் கல்வியைத் தொடர சிரமப்படும் மாணவர்களுக்கு அனைவரும் துணைநிற்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அரோரா போட்ட கேஸில் ஆடிப்போன பாரு ! அடித்து ஓட விட்ட விக்ரம்!
சூப்பர்ஸ்டாரின் டைம்லெஸ் மாஸ் மூவீஸ் : மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய டாப் 10 ரஜினி படங்கள்