மறக்க முடியுமா மயில் கதாபாத்திரத்தை….. வேதனையில் ஸ்ரீ தேவி ரசிகர்கள்…..

First Published Feb 25, 2018, 9:01 AM IST
Highlights
Sri devi died heart attack in dubai


இயக்குநர் பாராதிராஜா இயக்கிய முதல் திரைப்படமான  16  வயதினிலே படத்தில் நடிகை ஸ்ரீதேவி நடித்த மயில் கதாபாத்திரம் அப்போதும் ரசிகர்களால் மறக்கமுடியாது. அது மட்டுமல்ல மூன்றாம் பிறை படத்தில் அவரின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை எனலாம். அத்தகைய ஒரு ஆளுமை மிக்க நடிகை திடீரென மறைந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்ரீதேவி இந்திய திரைபடத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார்.1967 ஆம் ஆண்டு ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் பிரபலமான இவர், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தன்னுடைய நடிப்புத் திறமையினால் அனைவருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர்  ஸ்ரீதேவி.

நடிகை ஸ்ரீதேவி, விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த மீனப்பட்டியில் , 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி பிறந்தார்.

தமிழ் நாட்டில் பிறந்து இந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்கிய ஸ்ரீதேவி,1967-ல் ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

கதாநாயகியாக இவர் நடித்த முதல் திரைப்படம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1976ல் வெளிவந்த ‘மூன்று முடிச்சு’.ஆரம்ப காலத்தில் கமலஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்களுடன் பல திரைப்படங்களில் நடித்த இவர், பின்னர் மலையாளத் திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். ‘ஆலிங்கனம்’, ‘குட்டவும் சிக்க்ஷையும்’, ‘ஆத்யபாடம்’, ‘ஆ நிமிஷம்’ போன்றவை ஸ்ரீதேவியின் சிறந்த மலையாளத் திரைப்படங்கள் ஆகும்.

ஸ்ரீதேவி தனது தந்தையை “லம்ஹே” திரைப்பட படப்பிடிப்பின் போதும் மற்றும் தாயை “ஜூடாய்” படப்பிடிப்பின்போதும் இழந்தார். அவருடைய பெற்றோர்களை இளம் பருவத்திலேயே இழந்ததால், சமுதாயத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கவேண்டியதாயிற்று.

1986 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீதேவியையும், பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியையும் இணைத்து ஒரு சில வதந்திகள் பரவியது.

ஆனால், மிதுன் சக்ரவர்த்தி அவரது மனைவி யோகிதா பாலியை விவாகரத்து செய்யவில்லை என்ற முடிவுக்கு வரவே அந்த பிரச்சனையும் அத்துடன் மறைந்தும்போனது.

பின்னர், ஜூன் 2, 1996 ஆம் ஆண்டு ஸ்ரீதேவிக்கும், திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது. ஸ்ரீதேவிக்கு, ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவருடைய திருமணத்திற்கு பிறகு, அவருடைய மைத்துனனான அனில் கபூருடன் நிறைய படங்கள் நடித்துள்ளார்.

1978 ஆம் ஆண்டு ஸ்ரீதேவிஇந்தி திரைப்படங்களில் அறிமுகமானார். ஆனால், இவர் நடித்த முதல் இந்தி திரைப்படமான “சோல்வா சாவன்” துரதிருஷ்டவசமாக வெற்றி பெறவில்லை. பின்னர், இவருடைய இரண்டாவது படமான “ஹிம்மத்வாலா” ஒரு பெரும் வெற்றியை தேடித்தந்ததோடு மட்டுமல்லாமல், இந்தி திரைப்படஉலகில் ஒரு நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றுத்தந்தது.

அதன் பிறகு, அவருடைய “சத்மா” திரைப்படம் பெரும் புகழையும், பாராட்டுகளையும் தேடித்தந்தது.1980ஆம் ஆண்டு காலகட்டங்களில், இவர் ஒரு சிறந்த நடிகையென்று அனைவராலும் பாராட்டப்பெற்றார்.பின்னர்,

“சாந்தினி” திரைப்படம் பெரும் வெற்றியை தேடித்தந்தது மட்டுமல்லாமல், கோலிவுட்டில் அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் இவரும் ஒருவரென்ற அந்தஸ்தையும் தந்தது.

தமிழில் 16 வயதினிலே திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. அதில் அவர் நடித்த மயில் என்ற கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது.

பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1983ஆம் ஆண்டு வெளிவந்த “மூன்றாம் பிறை” திரைப்படம், திரைப்பட உலகில் பல சாதனைகளைப்பெற்றது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் கமலுடன் மனநிலை பாதித்த ஒரு பெண்ணாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, அனைவரையும் வியக்கவைத்தது மட்டுமல்லாமல், திரைப்பட உலகில் ஒரு புதிய பரிணாமத்தையும் ஏற்படுத்தியது எனவும் கூறலாம்.

போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவைவிட்டு விலகியிருந்த ஸ்ரீதேவி, ஆறு ஆண்டுகள் கழித்து ஒன்றிரண்டு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். பின்னர் 14 ஆண்டுகளுக்கு பிறகு “இங்கிலீஷ் விங்கிலிஷ்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படத் துறையில் கால்பதித்தார். இப்படம் தமிழிலும், இந்தியிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டு 2012 ஆம் அண்டு அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. பிறகு தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிபடுத்திய ஸ்ரீதேவிக்கு,2013 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று மத்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.

பிலிம்பேர் விருது (தெற்கு)’–‘மீண்டும் கோகிலா’ என்ற தமிழ் படத்திற்காக      வழங்கப்பட்டது.

சிறந்த நடிகைக்கான ‘பிலிம்பேர் விருது’,“சால்பாஸ்” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.

சிறந்த நடிகைக்கான ‘பிலிம்பேர் விருது’,“லம்ஹே” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.

பிலிம்பேர் விருது’,“க்ஷன க்ஷனம்” என்ற தெலுங்கு படத்திற்காக வழங்கப்பட்டது.

‘நந்தி விருது’,“க்ஷன க்ஷனம்” என்ற தெலுங்கு படத்திற்காகவழங்கப்பட்டது.

“MAMI விருது” இந்தி சினிமாவில் இவருடைய சிறந்த பங்களிப்பிற்காகவழங்கப்பட்டது.

வம்சி ஆர்ட்ஸ் தியேட்டர்  இன்டர்நேஷனல்”மூலமாக ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ கிடைத்தது.

‘டொராண்டோ’ சிறந்த நடிகைக்கான விருதினை“தேவராகம்” படத்திற்காக வழங்கியது.

அண்மையில் இவர் நடித்த மாம் திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தனது கணவரின் அண்ணன் மகன் திருமணத்துக்காக துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவிக்கு அங்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

click me!