துல்கர் சல்மான்- மிருணாள் தாக்கூர்- ஹனுராகவ புடி - ஸ்வப்னா சினிமாஸ் கூட்டணியில் தயாரான 'சீதா ராமம்' படத்திற்கு, மெல்ஃபெர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது கிடைத்திருக்கிறது.
பிரபல முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களான வைஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ் இணைந்து அழகான காவிய காதல் கதையான 'சீதா ராமம்' எனும் திரைப்படத்தை தயாரித்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் கதையின் நாயகனாகவும், நடிகை மிருணாள் தாக்கூர் கதையின் நாயகியாகவும், நடிகை ரஷ்மிகா மந்தானா முக்கிய வேடத்திலும் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை ஹனுராகவ புடி இயக்கியிருந்தார். பி. எஸ். வினோத் ஒளிப்பதிவு செய்த இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருந்தார். இந்தத் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பிரம்மாண்டமான வெற்றியை உலக அளவில் பெற்றது.
ஆண்டுதோறும் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மெல்ஃபெர்ன் நகரில் இந்திய திரைப்பட விழா சிறப்பாக நடைபெறுகிறது. 14 வது இந்திய திரைப்பட விழா மெல்ஃபெர்ன் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த திரைப்படம் எனும் பிரிவில் போட்டியிட்ட 'சீதா ராமம்' படத்திற்கு சிறந்த படத்திற்கான விருது கிடைத்தது. விருது வழங்கும் விழாவில் படக் குழுவினர் 'சீதா ராமம்' படத்திற்கு வழங்கப்பட்ட விருதினை பெற்றுக் கொண்டனர்.
இதனால் 'சீதா ராமம்' படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் அவர்களுக்கு இது மறக்க இயலாத படைப்பாகவும் உள்ளது என இந்த படத்தை பெருமைப்படுத்தியுள்ளனர்.