shivasankar: கொரோனாவின் மற்றொரு கொடூரம்.... தேசிய விருது வென்ற நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார்

By Ganesh PerumalFirst Published Nov 28, 2021, 8:43 PM IST
Highlights

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது டுவிட்டர் பதிவு மூலம் உறுதி செய்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குனராக வலம் வந்தவர் சிவசங்கர் மாஸ்டர். 800க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்த இவர் தமிழ் திரையுலகிலும் ரஜினி, அஜித், தனுஷ் போன்ற முன்னணி பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார். 

மேலும்  பல தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்தும் உள்ளார். சமீபத்தில் கூட தமிழில், சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் விஜய்யின் ‘சர்கார்’ போன்ற படங்களில் நடித்திருந்தார்.

தேசிய விருது, தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது என பல்வேறு விருதுகளை வென்றுள்ள இவர், அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவரின் மருத்துவ செலவுக்கு பணமில்லாத காரணத்தால், தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு, சிவசங்கர் மாஸ்டரின் மகன் அஜய் கிருஷ்ணா சமூக வலைதளம் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து தனுஷ், சிரஞ்சீவி, சோனு சூட் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் சிலர் அவருக்கு உதவிக்கரம் நீட்டினர்.

இந்நிலையில், நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது டுவிட்டர் பதிவு மூலம் உறுதி செய்துள்ளார்.

click me!