இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடித்திருக்கும் தி பாய்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு 'தி பாய்ஸ்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான வெங்கட் பிரபு மற்றும் நடிகர் ஆர்யா ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள்.
'ஹர ஹர மஹா தேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்', 'இரண்டாம் குத்து', 'பொய்க்கால் குதிரை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி, கதையின் நாயகர்களுள் ஒருவராக நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'தி பாய்ஸ்'. இந்தத் திரைப்படத்தில் அவருடன் 'ஜெயிலர்' ஹர்ஷத், 'கலக்கப்போவது யாரு' வினோத், ஷா ரா, யுவராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
அஹமத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண் மற்றும் கௌதம் என இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
சாம் ஆர் டி எக்ஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை முஜிபீர் ரஹ்மான் கவனித்திருக்கிறார். தமிழ் திரையுலகில் முற்றிலும் வித்தியாசமான முயற்சியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை நோவா ஃபிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் E. செந்தில்குமார் தயாரித்திருக்கிறார். இவருடன் இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார்.. அவருடைய சொந்த பட நிறுவனமான டார்க் ரூம் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இப்படத்தை இணைந்து தயாரித்திருக்கிறார்.
படத்தை பற்றி சந்தோஷ் பி. ஜெயக்குமார் பேசுகையில், '' ஐந்து இளம் பேச்சுலர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் 'தி பாய்ஸ்' படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஐவரும் தங்களது இளமைக் காலத்தில் தவறான பழக்கங்களுக்கு ஆளாகினால்... அவர்களின் எதிர்காலமும், வாழ்வும் எப்படி இருக்கும்? என்பதனை இதுவரை சொல்லப்படாத வகையில் கல்ட் சினிமாவாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை. மாணவர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் தான் '' என்றார்.
'கஜினிகாந்த்', 'பொய்க்கால் குதிரை' போன்ற படைப்புகளை வழங்கிய இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி .ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'தி பாய்ஸ்' திரைப்படம் வித்தியாசமான பாணியில் தயாராகி இருக்கும் கல்ட் சினிமா என்பது இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கில் தெரிய வருகிறது. இதனால் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இளைய தலைமுறையினரிடத்திலும், இணையவாசிகளிடமும் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.
இதையும் படியுங்கள்... நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டாங்களே... அஜித்தின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை நிராகரித்தது ஏன்? ரம்பா சொன்ன சீக்ரெட்