தமிழர்களுக்கு விரோதி ரஜினியா? விஜயா? எஸ்ஏ சந்திரசேகருக்கு ஆதாரத்துடன் பதில்!

By Selva KathirFirst Published Feb 21, 2020, 11:12 AM IST
Highlights

நடிகர் ரஜினிகாந்த் தமிழர்களுக்கு விரோதமாக பேசி வருவதாக நடிகர் விஜயின் தந்தை எஸ்ஏசி கூறி வரும் நிலையில் உண்மையில் தமிழர்களுக்கு யார் துரோகி என்பதற்கான ஆதாரம் இது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் வரி ஏய்ப்பு புகாரில் நடிகர் விஜயின் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. இதில் நடிகர் விஜய் வாங்கியதாக கூறிய சம்பளத்திற்கும் அவர் வருமான வரித்துறையிடம் தான் கொடுத்த கணக்கிற்கும் இடையே வேறுபாடு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து விசாரணைக்கு வருமாறு விஜய்க்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மனும் அனுப்பினர். இது குறித்து வாய் திறக்காத விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சி தற்போது டிவி டிவியாக அழைத்து பேட்டி அளித்து வருகிறார்கள். அந்த வகையில் தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் விஜயின் அப்பா எஸ்ஏசி அளித்துள்ள பேட்டியில் ரஜினி தமிழர்களுக்கு விரோதமாகபேசி வருகிறார் என்று தெரிவித்திருந்தார். அதாவது ரஜினி தேசியம் பேசுவதை இப்படி விமர்சித்திருந்தார் எஸ்ஏசி. சரி ரஜினியை விடுங்கள் எஸ்ஏசியின் மகன் விஜய் தமிழர்களுக்கு விரோதமாக கடந்த காலங்களில் நடந்து கொண்டதை இப்போது பார்க்கலாம். கடந்த 2009ம் ஆண்டு ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களில் விடுதலைப் புலிகள் ஈழத்தில் தோற்கடிக்கப்பட்டனர். தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவின் உதவி இல்லை என்றால் விடுதலைப் புலிகளை எங்களால் தோற்கடித்திருக்க முடியாது என்று வெளிப்படையாக அறிவித்தார். இது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தியது. ஏனென்றால் அப்போது இந்தியாவை ஆட்சி செய்தது சோனியா காந்தி தலைமை தாங்கிய காங்கிரஸ் அரசு. அதாவது காங்கிரஸ் அரசு தான் ஆயுதங்கள், ரேடார்கள் கொடுத்து விடுதலைப்புலிகளை வெல்ல இலங்கை ராணுவத்திற்கு உதவியது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வலுத்தது. தமிழர்களின் விரோதியாக காங்கிரஸ் பார்க்கப்பட்டது. ஈழத்தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவிக்க ஆயுதம் கொடுத்து உதவிய காங்கிரசுக்கு எதிராக திமுகவினரே வெளிப்படையாக பேச ஆரம்பித்தனர்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் அப்போதைய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி சென்றார் எஸ்ஏசியின் மகன் விஜய். அதாவது தமிழகமே காங்கிரசுக்கு எதிராக கொதித்துக் கொண்டிருந்தது. தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாக ஆதாரங்கள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருந்தன. அப்போது தன்னுடைய பெயரை வெறும் விஜய் அல்ல ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு ராகுல் காந்தியை சந்திக்க அப்பாய்ன்ட்மென்ட் வாங்கினார் விஜய். ஏன் தெரியுமா-? அதற்கு முன்னதாக விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை தொடர்புடைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பதற்கு தான். ராகுல் காந்தியை சந்தித்து வந்த பிறகு நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக பேச்சுகள் எழுந்தன. பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் விஜய். இப்படி தமிழகமே காங்கிரசை எதிர்த்த நிலையில் அந்த கட்சியுடன் ஒட்டி உறவாடினயார் விஜய். காரணம் வருமான வரித்துறையின் மேல் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க.

இது ஒரு புறம் இருக்க நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் போட்டியிட்ட ராகுல் காந்திக்கு ஆதரவாக விஜய் ரசிகர் மன்றம் தேர்தல் பணியாற்றியது. இப்படி ராகுல் காந்தியுடன் நெருக்கமாக இருக்கும் விஜய் தமிழர்களுக்கு விரோதமாக செயல்பட்டாரா? அல்லது ஈழப்போரை புனிதப் போர் என்று வெளிப்படையாக பேசிய ரஜினி தமிழர்களுக்கு விரோதமாக செயல்பட்டாரா? நடிகர் விஜய் கிறிஸ்தவராக தன்னை எப்போதும் அடையாளப்படுத்திக் கொள்வார். அந்த வகையில் அவருக்கு பாஜக என்றால் வேப்பங்காயாக கசக்கும். ஆனால் தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால் கோவை வரும் மோடியைதேடிச் சென்று சந்திப்பார். தனக்கு காரியம் ஆகவில்லை என்றால் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக பேட்டி அளிப்பார். ஜிஎஸ்டிக்கு எதிராக படத்தில் வசனம் வைப்பார். அதனால் 2009ல் காங்கிரசுடன் ஒட்டி உறவாடியது ஏன் என்பதை விளக்கிவிட்டு பிறகு தமிழர்களுக்கு விரோதி யார் என்பதை எஸ்ஏசி விளக்கமாக கூறலாம்.

click me!