26 ஆண்டுகள் கழித்து தீபாவளிக்கு வெளிவரும் ரஜினி படம்.. ரஜினி-சிவா கூட்டணியின் ‘அண்ணாத்த’ மாஸா, கொல மாஸா!

By Asianet TamilFirst Published Oct 27, 2021, 10:26 PM IST
Highlights

‘அண்ணாத்த’ இன்னொரு ‘படையப்பா’வை நினைவுப்படுத்தும் என்று அண்மையில் நடிகை குஷ்பு கூறியிருந்தார். தொன்னூறுகளின் இறுதியில் வெளியான ‘படையப்பா’ ஒரு மாஸ் படம். 

ரஜினி படம் என்றாலே அன்றுதான் அவருடைய ரசிர்களுக்கு தீபாவளி. அதுவும் தீபாவளி அன்று ரஜினி படம் என்றால், அது டபுள் தமாக்காதான். சும்மா இல்ல, இந்த டபுள் தமாக்காவை 26 ஆண்டுகள் கழித்து உற்சாகமாக அனுபவிக்கப்போகிறார்கள் ரஜினி ரசிகர்கள். இதுவரை 90-ஸ் கிட்ஸ்கள் அனுபவிக்காத, இந்தக் கொண்டாட்டத்தை தீபாவளியன்று நேரடியாக உணரப்போகிறார்கள். ஆமாம், 1995-ஆம் ஆண்டு ‘முத்து’ படம் தீபாவளி திருநாளன்று வெளியான பிறகு, 26 ஆண்டுகள் கழித்து ‘அண்ணாத்த’ படம் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தைக் கலக்கி வரும் நிலையில், அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் சிறுத்தை சிவாவின் கைவண்ணத்தில் வெளியாகும் ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் எப்படி இருக்கும்? 


‘சிறுத்தை’ சிவாவுக்கு அடையாளம் பெற்றுக்கொடுத்த ‘சிறுத்தை’ படம் அதிரடி ஆக்‌ஷனாக ராக்கெட் ராஜாவாக பெயர் பெற்றுக்கொடுத்தது.  ‘சிறுத்தை’க்குப் பிறகு ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ என ‘வி’ வரிசைப் படங்களை எடுத்து அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் ஆஸ்தான இயக்குநராக உருவெடுத்தார் சிறுத்தை சிவா. சிவா படம் என்றாலே ஆக்‌ஷன் பிளஸ் செண்டிமென்ட்தான். முதன் முறையாக இக்கூட்டணி ‘வீரம்’ படத்தில் இணைந்தது. கல்யாணம் செய்து கொண்டால், மனைவி தனது தம்பிகளை தன்னிடம் இருந்து பிரித்துவிடுவார் என்று கல்யாணமே செய்து கொள்ளாமல் இருக்கும் அஜித்துக்கும் தம்பிகளுக்கும் இடையேயான பாசப் பிணைப்பை ஆக்‌ஷன் அவதாரத்தோடு கலவையாக கொடுத்திருந்தார் சிவா.


அடுத்து, சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’, ‘வீரம்’ படத்துக்கு தலைகீழாக இருந்தது. பாசத்தைக் கொட்டித் தீர்க்கும் ஒருவன் வெறி கொண்ட வேதாளமாகச் சீறும் பின்னணியைப் பேசியது ‘வேதாளம்’. தங்கை பாசம், சர்வதேச கும்பல், அதிநவீன தொழில்நுட்பம் என வேறு உலகைக் காட்டியது ‘வேதாளம்’  இதேபோல இதே கூட்டணியில் உருவான ‘விவேகம்’, எந்த ஒரு நிலையிலும் முயற்சியைக் கைவிடாதவன், என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைக் காட்டியது அப்படம். ஹாலிவுட் பாணியில் கிராஃபிக்ஸ் விஷுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பம் போன்றவற்றைக் கச்சிதமாகப் பயன்படுத்தி, அதிரடி ஆக்‌ஷன் படமாக மிரட்டியிருந்தார் சிவா. 


அடுத்து, அஜித்-சிவா கூட்டணியில் உருவான ‘விஸ்வாசம்’ படம், சிவாவை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றது. ஒரு வகையில் ‘அண்ணாத்த’ பட வாய்ப்பு சிவாவுக்குக் கிடைக்க ‘விஸ்வாச’மும் ஒரு காரணம். 2019 பொங்கல் திருநாளன்று வெளியான ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்குப் போட்டியாக வெளியானது ‘விஸ்வாசம்’. ரஜினி படத்தின் ஓபனிங்கையே ஒரு கை பார்த்தது ‘விஸ்வாசம்’. தன்னுடைய மகளின் கனவை நிறைவேற்ற, அவரின் உயிரைக் காக்க, உறுதுணையாக இருந்து, வெற்றி பெற வைக்கும் ஒரு பாசமிக்க தந்தையின் கதையைப் பேசியது ‘விஸ்வாசம்’. கதைக்குள் காமெடி, அடிதடி, காதல், குடும்பம், பாசம், நேசம் என அனைத்தையும் கலந்து ஜில்லென ஃப்ரூட் மிக்ஸராகவும் பக்கா பொழுதுபோக்கு படமாகவும் கொடுத்திருந்தார் சிவா.  இந்தப் படத்தைப் பார்த்துதான் சிவாவுக்கு ‘அண்ணாத்த’ படத்தை இயக்கும் வாய்ப்பை ரஜினி கொடுத்தார்.


மொத்தத்தில் சிவாவின் எல்லா படங்களிலும் ஆக்‌ஷனும் செண்டிமென்ட்டும்தான் தூக்கலாக இருக்கும். ‘அண்ணாத்த’ படமும் அதே பாணியில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. தங்கை, மனைவி, குடும்பம் ஆகியவற்றுடன் வழக்கமான ஆக்‌ஷனையும் கலந்தும், ரஜினி என்ற மாஸ் ஹீரோவின் பிம்பத்தைத் தூக்கிப் பிடிக்கும் வகையிலும் இப்படத்தை சிவா உருவாக்கியிருக்கிறார். ‘அண்ணாத்த’ இன்னொரு ‘படையப்பா’வை நினைவுப்படுத்தும் என்று அண்மையில் நடிகை குஷ்பு கூறியிருந்தார். தொன்னூறுகளின் இறுதியில் வெளியான ‘படையப்பா’ ஒரு மாஸ் படம். 2020-களின் தொடக்கத்தில் வெளியாக உள்ள‘அண்ணாத்த’ கொல மாஸாக இருக்கும் என்று நம்புவோம்! 
 

click me!