‘90 எம்.எல்.’ டைரக்டர் இந்தப் பொழப்புக்கு வேற தொழில் பண்ணி சம்பாதிக்கலாம்’...பெண் இயக்குநரின் மானத்தை வாங்கிய தயாரிப்பாளர்...

By Muthurama LingamFirst Published Mar 5, 2019, 3:25 PM IST
Highlights

 இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கான மொத்தச் செலவில் முக்கால்வாசி அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கான சம்பளத்திற்கே போய்விடுகிறது. பிறகு எப்படி படத்தில் லாபம் கிடைக்கும்..

தமிழ் சமூகத்தின் பண்பாட்டை, கலாச்சாரத்தை சீரழிக்கிற மாதிரி படம் எடுத்த இயக்குநர், இப்படி ஒரு மட்டமான படம் எடுப்பதற்குப் பதில்  தனது பொழப்புக்கு வேறு ஏதாவது தொழில் பண்ணி சம்பாதிக்கலாம் என்று மிகக் கடுமையாக சாடினார் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன்.

ஸ்ரீபெருமாள் சாமி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் C.பெருமாள் தயாரித்துள்ள திரைப்படம் ‘ஒற்றாடல்.’இந்தப் படத்தில் விகாஷ், முத்துராமன் என்று இரண்டு நாயகர்கள் நடித்துள்ளனர். டெல்லி ஷா என்னும் புதுமுகம் நாயகியாக நடித்துள்ளார்.  நடிகர் ‘நிழல்கள்’ ரவி முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பிரபல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் கலந்துகொண்ட இவ்விழாவில் பேசிய பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன், “இந்தப் படத்தின் டிரெயிலர் மற்றும் பாடல் காட்சிகளைப் பார்த்தபோது சிறப்பான மேக்கிங்கில் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. படத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கான மொத்தச் செலவில் முக்கால்வாசி அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கான சம்பளத்திற்கே போய்விடுகிறது. பிறகு எப்படி படத்தில் லாபம் கிடைக்கும்..

தெலுங்கில் இது போன்று இல்லை. அங்கே 20 கோடியில் படம் எடுத்தால் 5 கோடிதான் நடிகர், நடிகையர் சம்பளமாக பேசுகிறார்கள். ஹிந்தியிலும் இதேதான். அங்கே 100 கோடியில் படம் எடுத்தால் 25 கோடியை சம்பளத்திற்கும் மற்றவைகளை படப்பிடிப்பிற்காகவும் செலவிடுகிறார்கள். ஆனால் தமிழ்த் திரைப்படங்களில் மட்டும்தான் படத்தின் மொத்த பட்ஜெட்டில் 70 சதவிகிதம் படத்தின் ஹீரோ, ஹீரோயின் சம்பளத்திற்கே சரியாகிவிடுகிறது. அப்புறம் மிச்சம் இருப்பதில்தான் ஷூட்டிங் நடத்த வேண்டியிருக்கிறது. இந்தப் போக்கை மாற்ற வேண்டும்.

சமீப காலமாக நல்ல படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. நல்லபடியாக ஓடுகின்றன. இப்போ லேட்டஸ்ட்டா ‘எல்.கே.ஜி.’ படம்கூட இப்போவரைக்கும் நல்லா ஓடிக்கிட்டிருக்கு. அந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் கே.ஆர்.பிரபு என்னுடைய மகன்தான். கடந்த 10 வருஷமா வீட்டுக்கே வராமல்.. என்னுடன் பேசாமல் இருக்கிறான். திரையுலகத்தில் ஜெயித்த பின்னாடிதான் வீட்டுக்கு வருவேன்னு வைராக்கியமா இருக்கான்.

இப்போ ஒரு படம் புதுசா வந்திருக்கு. ‘90 எம்.எல்’.லாம். அதென்ன ‘90’ என்று தெரியவில்லை. படம் அத்தனை கர்மமா இருக்கு. தமிழ்ச் சமூகத்தை.. நம்முடைய பழக்க வழக்கத்தை, பண்பாட்டை, கலாச்சாரத்தை அழிக்கிற மாதிரி வந்திருக்கிறது. இப்படி படம் எடுத்து சம்பாதிக்கிறதுக்கு பதிலா வேற தொழில் பண்ணிப் பொழைக்கலாம்..” என்றார்.  

click me!