நம்மை அழைக்காத பாடல்...கண்ணை மூடினால், எண்ணம் மறையுமா..?

By Thiraviaraj RMFirst Published Apr 24, 2020, 7:43 PM IST
Highlights

ஆற்றாமையை, இயலாமையை, ஆசையை, ஏக்கத்தை... வார்த்தைகளில் பிழிந்து தருகிறார் கவிஞர்.

திரைப்பாடல் - அழகும் ஆழமும்-20:  நம்மை அழைக்காத பாடல்..! 

இத்தனை ஆண்டு கால தமிழ்ச் சினிமாவில், சில காட்சிகளை நாம் பல படங்களில் பார்க்கிறோம். திருமணத்தில் தாலி கட்டுகிற நேரத்தில், யாரேனும் வந்து தடுத்து நிறுத்துவது, பல பேர் கூடியிருக்கிற சமயத்தில், போலிஸ்  தந்தை, மகனைக் கைது செய்வது, கோயில் பரிவட்டம் சூட்டுதல், மரத்தடி பஞ்சாயத்தைக் கிண்டல் செய்தல்... காதல் ஏக்கம் (அ) தோல்வியை நாயகன் (அ) நாயகி பாடுவதும் இந்த வரிசையில் ஒன்று. 

1970-ல், ஏ.சி.திருலோகசந்தர் இயக்கி, வெளிவந்த படம் - எங்கிருந்தோ வந்தாள். சிவாஜிகணேசன் - ஜெயலலிதா இணைந்து, உணர்ச்சிகரமான நடிப்பில் கவர்ந்தார்கள். முதல் காதல் தோல்வி; தன்னை விரும்பியவள் தன் கண் எதிரே தீயில் தன்னை மாய்த்துக் கொள்கிறாள். அந்த பயங்கர சம்பவத்தால், மனநிலை பாதிக்கப் படுகிறான். 

அவனிடம் அன்பு காட்டுவார் யாரும் இல்லை. பணியாளாக நுழைகிறாள் நாயகி. இருவருக்கும் இடையில் நேசம் துளிர் விடுகிறது. மிகச் சிறிய காலம்தான். 
அடுக்கடுக்காய் சோதனைகள்; ஒரு கட்டத்தில், அவனை விட்டுப் பிரியத் தீர்மானிக்கிறாள் அவள். ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் வெதும்பிப் பாடுகிறான் அவன். 

இந்தச் சூழலுக்குப் பாடல் எழுத கண்ணதாசன்! கேட்க வேண்டுமா..? ஆற்றாமையை, இயலாமையை, ஆசையை, ஏக்கத்தை... வார்த்தைகளில் பிழிந்து தருகிறார் கவிஞர். நான் அழைப்பது உன்னை அல்ல; 'எனது' உயிரை... கண்ணை மூடினால், எண்ணம் மறையுமா..? இதுசரி; இது தவறு என்று அறியாத குழந்தைக்கு, எடுத்துச் சொன்னால்தானே எதுவும் புரியும்..? அதை விடுத்து, தனியே விட்டுப் போனால் எப்படி..? 
 
படைத்த இறைவனும் கண்டு கொள்ளவில்லை; தெய்வம் போல் வந்த அவளுக்கும் கருணை இல்லை. என்ன செய்வான்..? எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பில், டி.எம்.சௌந்தராஜன் பாடிக் கேட்கிற யாருக்கும் நாயகனின் வருத்தம் மனதுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும். மெல்லிசையில் மெல்லிய சோகம் - இந்தப் பாடல்தான் அதன் அடையாளம். 

பாடல் வரிகள் இதோ:

நான் உன்னை அழைக்கவில்லை 
என் உயிரை அழைக்கிறேன். 
கண்ணை மறைத்துக் கொண்டால்
மனதில் எண்ணம் மறைவதில்லை. 

நான் சின்னக் குழந்தையம்மா 
சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே 
உனக்கும் உள்ளம் புரியவில்லை. 

என்ன தவறு செய்தேன் அதுதான் எனக்கும் புரியவில்லை 
வந்து பிறந்து விட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை
அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால் உலகம் புரியாதா..?
அம்மம்மா விவரம் புரியாதா..?
 
நான் உன்னை அழைக்கவில்லை..?  

என்னைப் படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை 
உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணை இல்லை. 
இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்கக்கூடாதா..?
அம்மம்மா இரக்கம் பிறக்காதா..?

நான் உன்னை அழைக்கவில்லை...

(வளரும்.

 
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

இதையும் படியுங்கள்:-

1.ஆடை முழுதும் நனைய நனைய அடித்த மழை... நீல விழிகள் மயங்கி மயங்கி கதை படித்த குடிசைப்பெண்..!

2.இந்தியத் திருநாட்டின் கலாச்சார அடையாளமாக காற்றினிலே வந்த கீதம் எம்.எஸ்.சுப்புலட்சுமி..!

3.வாழ்க்கையில் எத்தனையோ வழிகள்... பழக்கத்தை விட்டு விடலாம்... பாசத்தை விட முடியுமா..?

click me!