நடிகர் விஜய் படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோரி போஸ்டர் கிழிப்பு!!

By Asianet TamilFirst Published Sep 24, 2019, 1:36 PM IST
Highlights

நடிகர் விஜய் நடித்திருக்கும் பிகில் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என இறைச்சி வியாபாரி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக ஆட்சியரிடம் அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ராஜாமணி புகார் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் கோவை உக்கடம் புதிய மீன் மார்க்கெட் பகுதியைச்  சேர்ந்த இறைச்சி வியாபாரி கோபால் என்பவர் புகாரளிக்க வந்திருந்தார். அவர் கையில் நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாக இருக்கும் பிகில் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் நின்று கொண்டிருந்தார். 

திடீரென அவர் நடிகர் விஜய் பட போஸ்டரை கிழித்தெறிந்து கோஷம் போட தொடங்கினார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர் ஆட்சிய ராஜாமணி இடம் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாக இருக்கும் பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் மீன், கறி கோழி, ஆட்டு இறைச்சியை வெட்டும் கட்டை மற்றும் கத்தி மீது நடிகர் விஜய் செருப்பு அணிந்த கால் வைத்திருப்பது போன்று இருக்கிறது. இது இறைச்சி வியாபாரிகள் இடையே அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இறைச்சி வியாபாரிகளை கொச்சைப்படுத்தும் விதமாக நடிகர் விஜய்யின் போஸ்டர் இருக்கிறது. எனவே சர்ச்சைக்குரிய அந்த காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு கோபால் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளார். அவரிடம் புகாரை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அது சம்பந்தமாக விசாரணை நடத்துவதாக தெரிவித்தார்.

ஏற்கனவே பிகில் பட பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!