இனி தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை கிடையாது… அப்ப எப்படி சினிமா பாக்குறதாம் ?

By Selvanayagam PFirst Published Sep 2, 2019, 7:55 PM IST
Highlights

தமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். ரசிகர்கள் இனி தியேட்டர்களுக்கு சென்று டிக்கெட் பெறவும் விரிசையில் நிற்க வேண்டிய அவசியமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபின் திரையரங்கு டிக்கெட்டுகளின் விலை பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. திரைத்துறையினரின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குப் பின்னர் சினிமா டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இருப்பினும் முன்னணி கதாநாயகர்கள் படங்கள் வெளியாகும் போது அதிக விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவது தொடர்கிறது. ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யும் போது 30 ரூபாய் சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் அனைத்து சினிமா டிக்கெட்டுகளையும் இனி ஆன்லைனில் மட்டுமே பெறமுடியும் என்று செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திரையரங்குகளில் சினிமா டிக்கெட் கட்டணங்களை ஒழுங்குபடுத்தியுள்ளோம். அதேபோன்று திரையரங்குகளில் விற்கப்படும் பொருட்களின் விலையையும் ஒழுங்குபடுத்த பல்வேறு விதிமுறைகளை வகுத்து, அதன்படி செயல்படுத்தி வருகிறோம்.

நாள் ஒன்றுக்கு ஆன்லைன் மூலமாக எவ்வளவு டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. ஏற்கனவே கூறியபடி, திரையரங்கில் பார்க்கிங் கட்டணமும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

அதிகமான விலைக்கு சினிமா டிக்கெட்டுகள் வெளியில் விற்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. இதனால், ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் கொண்டு வரப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுவதுடன், அதற்கான விலை நிர்ணயிக்கப்பட்டு, அதுவும் விரைவில் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

click me!