
1980-களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான குஷ்பு, 1989-ம் ஆண்டு வெளியான ‘வருஷம் 16’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த், சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் தனது கணவர் சுந்தர்.சியுடன் இணைந்து அவ்னி சினி மேக்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இது மட்டுமல்லாமல் சின்னத்திரை தொடர்களை தயாரித்து, இயக்கி, நடித்தும் வருகிறார்.
கடைசியாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ படத்திலும், விஜயுடன் இணைந்து ‘வாரிசு’ படத்திலும் நடித்திருந்தார். இவருக்கு கடந்த 2000-ம் ஆண்டு இயக்குனர் சுந்தர்.சியுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அவந்திகா வெளிநாட்டில் திரைத்துறை குறித்து படித்து வருகிறார். அவரது இளைய மகள் அனந்திதா மேக்கப் மற்றும் அழகுத் துறையில் பணியாற்றி வருகிறார். அழகு மற்றும் மேக்கப் தொழில் தொடங்குபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மேக்கப் அகாடமி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
அழகு மற்றும் மேக்கப் துறையில் பணியாற்றி வரும் அனந்திதா தற்போது திரைத்துறையில் உதவி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் நடிகை குஷ்பு தியேட்டரில் உதவி இயக்குனர்கள் வரிசையில் அனந்திதாவின் பெயர் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.
அதில், “ஒரு பெற்றோராக மணிரத்னம் படத்தில் அவரது சீடராக என் மகளின் பெயரை பார்ப்பது எனக்கு மிகுந்த பெருமை தருகிறது. காலில் ஏற்பட்ட முறிவு காரணமாக அவளால் அந்த படத்தில் தொடர முடியவில்லை. இருப்பினும் குறுகிய காலம் அவள் தனது பங்களிப்பைச் செய்தாள். மணிரத்னத்திடமிருந்து அவள் சேகரித்த அறிவும், அவள் கற்றுக் கொண்டதும் அவளுக்கு வாழ்நாள் முழுவதும் உதவும். அந்த அனுபவம் உண்மையிலேயே மிகச் செழுமையானது. உங்களுடைய பெரிய மனதிற்கும், அவளுடைய பெயரை தவறாமல் திரையில் பகிர்ந்ததற்கும் நன்றி சார்” என பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.