’காலா' பேரு மாதிரி, மாஸ் கேங்க்ஸ்டர் படமா இருக்குமா?

First Published Jun 9, 2017, 1:37 PM IST
Highlights
Kaala will mass gangster film?


’கபாலிங்கற பேருக்கு ஏத்த மாதிரி, ஒரு மாஸ் கேங்க்ஸ்டர் படமா இருந்தா நல்லாயிருந்திருக்குமே’ என்பது ரஜினி ரசிகர்களின் எண்ணம் மட்டுமல்ல; அந்த படத்தைப் பார்த்த பலரது எண்ணமும் அதுதான்.

படத்தில் ரஜினியின் நடிப்பு கிளாஸாக இருந்தாலும், பாட்ஷா மாதிரி இன்னொரு படம் என்று நினைத்து வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனைத் தெரிந்துகொண்டு, இயக்குனர் பா.ரஞ்சித் ‘காலா’ படத்தை உருவாக்கி வருகிறாரா என்று தெரியவில்லை. ஆனால், ‘அப்படித்தான் இருக்கப்போகிறது’ என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கின்றன ‘காலா’ படப்பிடிப்புத்தளத்தில் இருந்து வெளியாகிவரும் புகைப்படங்கள். இந்த இரண்டு புகைப்படங்கள், அதற்கு ஒரு சோறு பதம். 

கறுப்பு வேட்டி, கறுப்பு சட்டை, அலட்சியமான உடல்மொழி, தீவிரம் நிறைந்த முகம் என்று நீளும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஸ்டைல்கோட், ’காலா’ வெளியானபிறகு மேலும் உயரத்திற்குதான் செல்லும்.

தற்போது இப்படத்தின் தலைப்புக்கு கீழே ‘கரிகாலன்’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை எதிர்த்து ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதன் முடிவைப் பொறுத்து, இதில் மாற்றம் வரவும் வாய்ப்பிருக்கிறது. 

வெறும் கரிகாலன் என்ற பெயரின் சுருக்கமாக மட்டுமல்லாமல், ஒரு பட்டப்பெயராகவும் இப்பெயர் இருக்கக்கூடும் என்பது பலரது கணிப்பு. காரணம், இந்தி மொழியில் காலா என்ற பெயருக்கு கறுப்பு என்றொரு அர்த்தம் உண்டு.

‘கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு’ என்ற பாடலையே சூப்பர்ஸ்டாருக்கு சமர்ப்பித்த தமிழ் சினிமாவுலகம், இந்த டைட்டில் கண்டு கண்டிப்பாக பெருமைப்படத்தான் செய்யும்.


காலா படம் பற்றி, தற்போது வரை பல தகவல்கள் உலா வருகின்றன. அவற்றுள் ஒன்று, இப்படத்தில் இஸ்லாமிய பாத்திரத்தில் நடிக்கிறார் ரஜினி என்பது.

அது போலவே, இந்துத்வாவைப் பிரதிபலிக்கும் பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் நானா படேகர் வருவதாகச் சொல்லப்படுகிறது. அதனால், படம் வெளியாகும் வரை கண்டிப்பாக சர்ச்சைகளுக்குப் பஞ்சமிருக்காது.



மும்பையில் வாழ்ந்த ஹாஜிமஸ்தான் என்ற நிழலுலக மனிதரின் வாழ்க்கையைத் தழுவியது என்றும் கூட, இப்படம் தொடங்கும் முன்பே சில தகவல்கள் வெளியாகின. இது அத்தனைக்கும் மேலாக, மும்பை தாராவியில் இருக்கும் தமிழர்களின் 40 ஆண்டுகால வாழ்க்கையையும் இப்படம் பேசும் என்றும் சொல்லப்படுகிறது. சூப்பர்ஸ்டாரின் திரைப்படம் என்றில்லை, எந்த ஒரு சினிமாவைப் பற்றிய எதிர்பார்ப்புகள் கடலளவுக்கு இருந்தாலும், சம்பந்தப்பட்ட திரைப்படமென்பது கையளவுக்கு தான் இருக்க முடியும். ஆனாலும், அந்த திரை அனுபவம் ஒரு கடற்கரையில் கை நனைத்த திருப்தியைத் தரவேண்டும். அதனைத் தரும் என்ற நம்பிக்கையைத் தருகிறான் இந்த ’காலா’.

click me!