வைகை அணை கட்டும் பணியில் ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்த இளையராஜா...

By vinoth kumarFirst Published Dec 22, 2018, 3:40 PM IST
Highlights

அவ்வரிசையில் சேலம் கல்லூரி ஒன்றில் நேற்று முன் தினம் உரையாற்றிய இளையராஜா, தான் வைகை அணை கட்டும் பணியில் கட்டிட வேலை பார்த்தபோது நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் 7 ரூபாய் வாரச் சம்பளத்துக்கு வேலை பார்த்த நெகிழ்ச்சியான தகவலை வெளியிட்டார்.

தனது 75 வது பிறந்தநாளை ஒட்டி அழைக்கும் அத்தனை கல்லூரிகளுக்கும் சென்று பேசிவரும் இளையராஜா, தனது வாழ்நாளில் நடந்த அபூர்வ சம்பவங்களைத் தொடர்ந்து மாணவ,மாணவிகளிடம் பகிர்ந்து வருகிறார்.

அவ்வரிசையில் சேலம் கல்லூரி ஒன்றில் நேற்று முன் தினம் உரையாற்றிய இளையராஜா, தான் வைகை அணை கட்டும் பணியில் கட்டிட வேலை பார்த்தபோது நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் 7 ரூபாய் வாரச் சம்பளத்துக்கு வேலை பார்த்த நெகிழ்ச்சியான தகவலை வெளியிட்டார்.

...இசையை உருவாக்க முடியாது. இசை என்பது உருவானது. பறவை, அருவி போல தானாக வருகிறது. நான் எதையும் உருவாக்கவில்லை. சுவிட்ச் போட்டமாதிரி மெட்டு என்னிடம் கொட்டுகிறது. எப்போது கேட்டாலும் எந்த பாடலானாலும் அன்று மலர்ந்த புத்தம் புது மலர்போல நீங்கள் கேட்டு மகிழ்ந்தீர்களோ அதுதான் பாடலுக்கான தகுதி.

மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு வருகிறீர்கள், படிக்கிறீர்கள், சென்று விடுகிறீர்கள், ஆனால் நீங்கள் புது நீரோட்டம் போல எங்கும் பாய்ந்து பசுமையாக இருக்க வேண்டும். நீங்கள் செய்யும் பணியை நெஞ்சில் நிற்கும் ஈரம்போல எப்போதும் பசுமையாக இருக்க வேண்டும். எல்லா கல்லூரிகளிலும் நான் ஒரே வி‌ஷயத்தை பேச முடியாது. ஏனெனில் மாணவர்கள் அந்த கல்லூரிகளில் இருந்து மாறி விடுகிறார்கள். இங்கு உங்களை பார்க்கும்போது எனக்கு உற்சாகமாக இருக்கிறது.

என்னுடைய இளம் வயது வாழ்க்கைப்பற்றி உங்களுக்கு தெரியாது. சின்ன வயதில் மியூசிக் வரும் என்ற அறிகுறி எதுவும் என்னிடத்தில் கிடையாது. நான் படிக்க வேண்டும். பள்ளிக் கூடத்திற்கு போக வேண்டும். நல்லா படிக்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது. நான் வகுப்பிலே முதல் மதிப்பெண் பெறுவேன். என்னிடம் எதுக்கு படிக்கிறாய் என்று கேட்டால் எனக்கு சொல்ல தெரியாது. ஆனால் படிக்க வேண்டும் இது மட்டுமே எனக்கு தெரியும். 8-ம் வகுப்பிற்கு மேல் பள்ளிக்கூடத்திற்கு போக முடியவில்லை.

ஒரு ஜோசியக்காரர் சொல்லிவிட்டார் உனக்கு 8-ம் வகுப்பிற்கு மேல் படிப்பு கிடையாது என்று. அவருடைய ஜோசியத்தை பொய்யாக்குகிறேன் என்று இளங்கோவடிகள் மாதிரி உறுதியாக இருந்தேன்.

இளங்கோவடிகள் இளையவர். சேரன் செங்குட்டுவன் மூத்தவன். மூத்தவன் இருக்கின்றபோது, இளையவனுக்குத்தான் பட்டம் என்று ஜோசியர் சொன்னதால் இளங்கோவடிகள், உன்னுடைய ஜோசியத்தை பொய்யாக்கிக் காட்டுகிறேன் என கூறி அந்த நிமிடமே அவர் துறவறம் பூண்டு ஜோசியத்தையும் பொய்யாக்கி விட்டேன் என்று சொன்னார்.

அதுபோல் நானும் ஜோசியத்தை பொய்யாக்கி காட்டுவேன் என்று சொன்னேன். 8-ம் வகுப்பு முடித்து 9 -ம் வகுப்பு சேரும் போது பள்ளியில் கல்வி கட்டணம் கட்டுவதற்கு அம்மா கையில் 25 ரூபாய் இல்லை. 3 மாதங்கள் வரை ஓடியது. அம்மா நான் வேலைக்கு சேர்ந்து பணம் சேர்த்து வந்து படிக்கட்டுமா என கேட்டேன். அதற்கு சரிப்பா... போயிட்டு வா என்று சொன்னாங்க.

பெரியகுளத்திற்கு பஸ் ஏறி வைகை அணைக்கு சென்று வேலை செய்தேன். அதுதான் நான் சென்ற முதல் பஸ் அனுபவம். கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கும்போது பைப் மூலமாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தண்ணீர் பாய்க்கும் போது சும்மா பாய்க்க மாட்டேன். தண்ணீரோடு சேர்ந்து என்னுடைய பாட்டும் போகும். பாட்டோடு சேர்ந்து வளர்ந்த அந்த அணைதான் வைகை அணை.

நீங்கள் இப்போது போய் அங்கு ஒவ்வொரு கல்லையும் தட்டிப்பார்த்தாலும் அதில் சத்தம் இருக்கும். அங்கு வேலை செய்யும் தொழிலாளிகள் எல்லாம் டமால், டுமீல் என கல்லைப் போட்டுக் கொண்டிருப்பார்கள். அப்படி இருந்தாலும் நான் அரை டவுசரோடு சத்தமாக தண்ணீர் அடித்துக் கொண்டே பாடிக் கொண்டிருப்பேன். யாரையும் கவனிக்க மாட்டேன். தலைமை பொறியாளர் அவ்வப்போது மேற்பார்வைக்காக வருவார். அவர் பெயர் எஸ்.கே.நாயர்.

என்னை அவர் அழைத்து உனது பெயர் என்ன என்று கேட்டார். நான் ராஜய்யா என்றேன். எத்தனை வகுப்பு வரை படித்திருக்கிறாய் என கேட்டார். 8-ம் வகுப்பு வரை படித்துள்ளேன் என்று கூறினேன். உடனே அவர், என்னை அலுவலகத்தில் பணிபுரியுமாறு தெரிவித்தார். பைல்களை கொண்டு போய் வைக்க வேண்டும் இது தான் வேலை.

பிரச்சினை என்னவென்றால் நான் பாட முடியாது. வேறு வழியின்றி அங்கு வேலை செய்து புது 7 ரூபாய் நோட்டு எனக்கு கிடைத்தது. இந்த பணம் அப்போது ஆண்டிப்பட்டி கஜானாவில் இருந்து வரும். வார வேலை முடிவில் அந்த பணம் என் கையில் வருகிறது. கையில் கொடுத்ததும் அந்த பணத்தை பார்க்கிறேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த 7 ரூபாய் கொடுத்த மகிழ்ச்சியை வானளாவி பறந்த அந்த நினைவை என்னுடைய 7 கோடி ரூபாய் சம்பாத்தியம் கொடுக்கவில்லை. எவ்வளவு சம்பாதித்தாலும், அந்த சந்தோசத்தை இந்த பணம் தரவில்லை’ என்றார் இளையராஜா.

click me!