’இன்றைய அரசியல்வாதிகள் காமராஜர் காலில்விழுந்து வணங்கவேண்டும்’...விருதுநகரில் இளையராஜா...

By Muthurama LingamFirst Published Feb 19, 2019, 2:24 PM IST
Highlights

‘சுத்தமான அரசியல் தலைவர் என்றால் அது காமராஜர்தான். இன்றைய அரசியல்வாதிகள் அவரது காலில் விழுந்து நமஷ்கரித்துவிட்டுத்தான் அரசியலுக்குள்ளேயே நுழையவேண்டும்’ என்கிறார் இசைஞானி இளையராஜா.
 

‘சுத்தமான அரசியல் தலைவர் என்றால் அது காமராஜர்தான். இன்றைய அரசியல்வாதிகள் அவரது காலில் விழுந்து நமஷ்கரித்துவிட்டுத்தான் அரசியலுக்குள்ளேயே நுழையவேண்டும்’ என்கிறார் இசைஞானி இளையராஜா.

தனது 75 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகளுக்கு விஜயம் செய்துவரும் இளையராஜா நேற்று விருதுநகர் ‘வி.வி.வி’ பெண்கள் கல்லூரியில் அவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

'’விருதுநகருக்கு நான் 1964–ம் ஆண்டு வந்துள்ளேன். தியாகி உலகநாதன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். காமராஜர் முதல்–அமைச்சராக இருந்தபோது அவரை பார்த்துள்ளேன். எங்கள் ஊருக்கு வந்திருந்தபோது அவருடன் 2 போலீசார் மட்டுமே வந்திருந்தனர்.

அரசியலில் கைச்சுத்தமாக இருக்க வேண்டும் என நினைப்போர் காமராஜரின் நினைவு இல்லத்துக்கு வந்து அவரது திரு உருவசிலையின் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து அரசியலை தொடங்க வேண்டும். அந்த அளவுக்கு அவர் சுத்தமான அரசியலை நடத்தியவர். நல்லாட்சி தந்தவர். வைகை அணையை அவர் கட்டியபோது அந்த கட்டுமான பணியில் நானும் வேலை பார்த்து அந்த சம்பளத்தில்தான் படித்தேன். அவரது மதிய உணவு திட்டத்தால்தான் என்னால் 6–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை படிக்க முடிந்தது.

என்னுடைய எல்லா பாடல்களும் மக்களுக்கு சொந்தம். நான் பாடி முடித்ததும் அந்த பாட்டு உங்களுக்கு சொந்தமாகி விடுகிறது. உங்களை எப்போது அழ வைக்க வேண்டும், சிரிக்க வைக்க வேண்டும் என்பது எனக்குத்தெரியும். திரைக்கு பின்னால் இருந்து உங்களை ஆட்டுவிப்பவன் நான். அது இயக்குனருக்கும் தெரியாது. தயாரிப்பாளருக்கும் தெரியாது.

நீங்கள்தான் என்னை இசைஞானி, மேஸ்ட்ரோ என்கிறீர்கள். நான் உயர்ந்த நிலையில் இருப்பதாகவோ தாழ்ந்த நிலையில் இருப்பதாகவோ எப்போதும் கருதுவதில்லை. என்னை எப்போதும் சமமாகவே இருதுகிறேன்.காதல் பாடல்களை இசைத்து இருந்தாலும் எனக்கு அந்த அனுபவம் இல்லை. இயல், இசை, நாடகத்தில் இசைக்கு நூல் இல்லை. அதை எழுதுவதற்கும் தகுதியானவர்கள் வரவில்லை. என்னிடமிருந்து அதை எழுதிக்கொள்ள நீங்கள் தயாராக இருந்தால் எழுதி உங்கள் பெயரை போட்டுக்கொள்ளுங்கள். படிக்க வேண்டிய வயதில் நீங்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும்’ என்று தனது உரையின்போது தெரிவித்தார் இளையராஜா.

click me!