எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் சங்கர் இயக்குகிறார். கடந்த சில நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை நடத்துவதற்காக சென்னை பூந்தமல்லி அருகே இருக்கும் நசரத்பேட்டையில் ஒரு தனியார் படப்பிடிப்பு தளத்தில் செட் அமைக்கப்பட்டு வந்தது.
இதற்காக ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. நேற்று இரவு செட் அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, யாரும் எதிர்பாராத விதமாக திடீரென பயங்கர சத்தத்துடன் கிரேன் அறுந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் அங்கு பணியில் இருந்த உதவி இயக்குனர் மது, இணை இயக்குனர் கிருஷ்ணா, உதவி நடன இயக்குனர் சந்திரன் ஆகிய 3 பேர் உடல் நசுங்கி பலியாகினர். 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து இந்தியன் 2 திரைப்பட குழுவை மட்டுமில்லாது ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. விபத்தில் 3 சகாக்களை இழந்து விட்டதாக நடிகர் கமல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், "எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.