
`பிலிம் ஃபேர்' விருதுகளை அள்ளிக் குவித்தது ‘தங்கல்’ திரைப்படம்
மும்பை, ஜன.16:- சிறந்த திரைப்படம், நடிகர், இயக்குனர், சண்டை பயிற்சியாளர் என 4 `பிலிம் ஃபேர் விருதுகளை இந்தி திரைப்படமான தங்கல் அள்ளிக் குவித்துள்ளது.
62-வது விழா
ஆண்டுதோறும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தை் சேர்ந்த பிலிம் ஃபேர் சினிமா இதழ், இந்தி திரைப்பட கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக கடந்த 1954-ம் ஆண்டு முதல் விருதுகளை வழங்கி வருகிறது.
மதிப்பு மிகுந்த விருதுகளில் ஒன்றாக இந்த விருது பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 62-வது பிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா, பாலிவுட் நகரமான மும்பையில் நேற்று முன்தினம் இரவு மிகுந்த உற்சாகத்துடன் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.
இதனை ரிலையன்ஸின் ‘ஜியோ’ வழங்கியது. நிகழ்ச்சியை பாலிவுட் நட்சத்திரம் ஷாரூக்கான், இயக்குனரும் தயாரிப்பாளருமான கரன் ஜோகர் மற்றும் கபில் சர்மா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
மல்யுத்தம் - மரியாதை
நிகழ்ச்சியில் மல்யுத்தத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘தங்கல்’ திரைப்படத்திற்கு 4 விருதுகள் கிடைத்தன.
கடந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக தங்கல் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகராக தங்கலில் நடித்த அமீர்கான் தேர்வானார்.
சிறந்த இயக்குனருக்கான விருது தங்கல் திரைப்படத்தை இயக்கிய நிதிஷ் திவாரிக்கு கிடைத்தது.
இதேபோன்று சிறந்த ஸ்டன்ட் மாஸ்டருக்கான விருது தங்கலில் பணியாற்றிய ஷியாம் கவுஷாலுக்கு வழங்கப்பட்டது.
இனி வரும் நாட்களிலும் இந்த திரைப்படம் பல்வேறு விருதுகளை அள்ளிக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த நடிகை
சிறந்த நடிகைக்கான விருது ‘உட்தா பஞ்சாப்’ படத்தில் நடித்த ஆலியா பட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த துணை நடிகராக ‘கபூர் அண்டு சன்ஸ்’ படத்தில் நடித்த ரிஷி கபூருக்கும், துணை நடிகை விருது ‘நீர்ஜா’ படத்தில் நடித்த ஷபானா ஆஸ்மிக்கும் வழங்கப்பட்டன.
வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை சத்ருஹன் சின்ஹா பெற்றுக்கொண்டார்.
சிறந்த அறிமுக நடிகருக்கான விருது ‘உட்தா பஞ்சாப்’ படத்தில் நடித்த தில்ஜித் டோசஞ்சுக்கும், சிறந்த அறிமுக நடிகைக்கான விருது ‘சாலா கடூஸ்’ (தமிழில் ‘இறுதிச் சுற்று’ என்ற பெயரில் வெளியான படம்) திரைப்படத்தில் நடித்த ரித்திகா சிங்கிற்கும் வழங்கப்பட்டது.
எடிட்டிங்-இசை
‘கபூர் அண்டு சன்ஸ்’ திரைப்படத்திற்கு சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த கதையமைப்பிற்கான விருது கிடைத்தது.
இதனை அத்திரைப்படத்தில் பணியாற்றிய சாகுன் பத்ரா மற்றும் ஆயிஷா தேவித்ரே ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
சிறந்த எடிட்டிங்-கான விருது நீர்ஜா படத்திற்கு வழங்கப்பட்டது. இதனை மோனிஷா பல்தவா பெற்றுக்கொண்டார்.
சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ‘ஏ தில் ஹே முஷ்கில்’ படத்தில் பணியாற்றிய பிரிதமுக்கு வழங்கப்பட்டது.
ஆடையமைப்பிற்கான விருதை உட்தா பஞ்சாப் படத்தில் பணியாற்றிய பாயல் சலுஜா பெற்றுக்கொண்டார்.
இதேபோன்று விமர்சனங்களின் அடிப்படையிலும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. பின்னணி பாடகருக்கான விருதை அஜித் சிங்கும், பாடகிக்கான விருதை நேஹா பாசினும் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் இந்தி திரையுலகத்தை சேர்ந்த பெரும்பான்மையான நடிகர், நடிகையர் மற்றும் திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்றனர்.
பாக்ஸ்
தங்கலுக்கு 4 விருதுகள்
1. சிறந்த படத்திற்கான விருது
2. சிறந்த நடிகர் -– ஆமிர் கான்
3. சிறந்த இயக்குனர் –- நிதிஷ் திவாரி
4. சண்டை பயிற்சியாளர் -– ஷியாம் கவுசால்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.