கண்களைக் குழமாக்கும் பிரபல இயக்குநரின் முகநூல் பதிவு...அம்மான்னா சும்மா இல்லடா...

By Muthurama LingamFirst Published Oct 30, 2019, 3:00 PM IST
Highlights

தீபாவளிக்கு இரண்டு நாள் முன், அம்மாவைப் பார்க்க வீட்டிற்கு சென்றிருந்தேன். போனால் ஒரு சிறிய குழந்தை வீட்டிற்குள் தவழ்ந்து கொண்டிருக்கிறான் - 10 அல்லது 11 மாசம் இருக்கும். எனக்கு இதெல்லாம் ஆச்சரியம் இல்லை. எப்போது வீட்டிற்கு போனாலும் இப்படி ஏதாவது இருக்கும். ஒரு நாய்க்குட்டி புதிதாக இருக்கும். அல்லது பூனைக்குட்டி ஓடிக்கொண்டிருக்கும். ஒரு பசுமாடும் கன்னுக்குட்டியும் வரும். அம்மாவுக்கு பார்த்துக்கொள்ளவும் சாப்பாடு போடவும், இப்படி விருந்தினர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

சினிமாவில் ஒரு ஹிட் கொடுத்தவுடன் டைரக்டர்கள் கார், பங்களா எல்லாம் வாங்கி செட்டில் ஆகிவிடுகிறார்கள் என்று கணக்குப் போடுவது பொதுப்புத்தி.ஆனால் நிதர்சனம் எப்போதும் அப்படி இருப்பதில்லை. ‘8 தோட்டாக்கள்’என்கிற தரமான ஹிட் படம் கொடுத்த ஸ்ரீ கணேஷின் இந்த முகநூல் பதிவு அதற்கு ஒரு நெகிழ்ச்சியான உதாரணம்.

அந்தப் பதிவு இதோ...தீபாவளிக்கு இரண்டு நாள் முன், அம்மாவைப் பார்க்க வீட்டிற்கு சென்றிருந்தேன். போனால் ஒரு சிறிய குழந்தை வீட்டிற்குள் தவழ்ந்து கொண்டிருக்கிறான் - 10 அல்லது 11 மாசம் இருக்கும். எனக்கு இதெல்லாம் ஆச்சரியம் இல்லை. எப்போது வீட்டிற்கு போனாலும் இப்படி ஏதாவது இருக்கும். ஒரு நாய்க்குட்டி புதிதாக இருக்கும். அல்லது பூனைக்குட்டி ஓடிக்கொண்டிருக்கும். ஒரு பசுமாடும் கன்னுக்குட்டியும் வரும். அம்மாவுக்கு பார்த்துக்கொள்ளவும் சாப்பாடு போடவும், இப்படி விருந்தினர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

பணம் விஷயத்தில் கவனமாக, பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை இந்த 2 ஆண்டுகளில் நிறைய கற்றுக்கொண்டேன். 8 தோட்டாக்களுக்கு பின் இழந்த பணமும் நேரமும் மிக அதிகம். நிறைய மனிதர்கள் மேல் வைக்கும் நம்பிக்கையும், அன்பும் பணம் என்ற புள்ளியில் தான் பெரும்பாலும் உடைகிறது.

‘அம்மாவை நல்லா பாத்துக்கணும்‘ என எப்போதும் பதட்டமும் ஓட்டமுமாகவே இருக்கும். முதல் படம் எடுக்கும் வரை இருந்த வறுமை, சூழல் வேறு. அம்மாவே எல்லாத்தையும் பார்த்துக்கொள்வார்கள். நான் வீட்டிற்கே எப்போதாவது தான் போவேன். மிஷ்கின் சார் ஆபிசிலிருந்து இப்போது ‘குருதி ஆட்டம்’ வரை – ஆபிசும், வேலையுமே கதி என கிடப்பதற்கு காரணம், ‘அம்மாவுக்கு ஊருக்கு பணம் அனுப்பணும்’ என்பது மட்டுமே மனசில் ஓடிக்கொண்டிருக்கும். இன்னொரு காரணம், வீடு சின்னது. நம்ம போகலன்னா அவங்களுக்கு கொஞ்சம் உதவியா இருக்கும் என்பதும்.

நினைவு தெரிந்து 6-ம் வகுப்பு வரை ஓலைக்குடிசையில் நெய்த வீடு தான். மழை நாட்களில் வீடு முழுவதும் கொட்டி விடும். அம்மா என்னை புடவையில் மறைத்தபடி நிறைய இரவுகள் தூக்கிக்கொண்டு அலைந்திருக்கிறார். பின், சேர்த்து வைத்த காசில் ஒரு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீடு. கடைசி 5 வருடங்களாக தாத்தாவுக்கு முடியாமல் போக, தாத்தா பாட்டியுடன் ஒரு ஓட்டு வீடு. ‘குருதி ஆட்டம்’ ஆரம்பித்த பின், இந்த பொங்கலுக்கு தான் அம்மாவை இட வசதியும், காற்றும் வெளிச்சமும் இருக்கும் ஒரு நல்ல வீட்டிற்கு மாற்றினேன். பல வருட கனவு.

தாத்தாவின் இடம் மட்டும் இப்போது இருக்கிறது – வீடு இடிந்த நிலையில். அதில் ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும். இருக்கும் கொஞ்ச பணத்தை வைத்து அம்மா செலவுகளை சமாளிப்பதும், சேர்த்து வைப்பதும் எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கும். தன் சக்திக்கு மீறி குடும்பத்திற்கு என நிறையவே செய்திருக்கிறார். அதற்கும் போக, அவர் ‘உதவி’ எனவும் நிறையே பேருக்கு ஓடுவார்.சொந்தக்காரர்கள், கூட வேலை செய்தவர்கள், பழகியவர்கள், தெரிந்தவர்கள் என எல்லாமும் ஒன்று தான். பெரிய அளவில் படிக்கவில்லை. கோர்வையாக பேச தெரியாது. ஆனால், ‘கல்யாணம், குழந்தை பிறப்பு, சாவு – இது மூணும் மனுச வாழ்க்கைல முக்கியமானது. இதுல மட்டும் ஒரு மனுசன் நிராதரவா நின்னுரக்கூடாதுப்பா’ என அவர் சொன்னது மிகப்பெரும் வாழ்க்கை தத்துவம். இதற்கெல்லாம் போய் நின்று விடுவார். தன் சூழலையும் மீறி.

புது வீட்டுக்கு போன பின், ‘பையன் தலையெடுத்துட்டான்’ என அம்மா முகத்தில் அவ்வளவு நிம்மதி. நிறைவு. இருந்த கடனை எல்லாம் அடைச்சாச்சு என நானும் பெருமூச்சு விட்ட போது, ‘குருதி ஆட்டம்’ படத்தில் சில சிக்கல்கள். எல்லா படத்திலும் நடப்பது தான். இது அம்மாவுக்கு தெரிய வேணாம் என நினைத்தேன். இப்போது தான் கொஞ்சம் நிறைவாக இருக்கிறார்கள். இந்த வருடம் முழுவதும் நிறைய கடன் வாங்கினேன் – அம்மாவுக்கு தெரியாமல் முதல்முறையாக. நெருங்கிய நண்பர்கள் சில பேர், மீதியை வட்டிக்கு வாங்கி சமாளித்து அனுப்பிக்கொண்டிருந்தேன். சரியாக தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன், எல்லா வாயில்களும் முடிந்துவிட்ட ஒரு சூழ்நிலை.

‘தீபாவளி செலவு’ இருக்கிறதே என பயந்து கொண்டிருந்த போது, அம்மாவின் போன் வருகிறது. வேறு சில செலவுகளும் சேர்த்து சொல்கிறார். அம்மா மனசு கோணக்கூடாது, நம் சூழலும் தெரியக்கூடாது என ‘இதோ, அதோ’ என அலைந்து கொண்டிருக்கிறேன். ஒன்றும் நடக்காத சூழ்நிலை. புதன்கிழமை வாக்கில் ஊரிலிருக்கும் பேங்கிலிருந்து ஒரு போன். கேஷியர் அண்ணன் தெரிந்தவர் தான். ‘தம்பி, அம்மா செயின் ஒண்ணு வைக்கணும்னு வந்தாங்க. அது இதுன்னு காரணம் சொல்லி 2 நாள் கழிச்சு வாங்கன்னு அனுப்பிட்டேன். அதான் உங்களுக்கு சொல்லுவோம்னு...’ என இழுக்கிறார்.

அம்மா இப்படித்தான். ஓரளவுக்கு மேல் நம் சூழல் அவருக்கு புரிந்துவிடும். அமைதியாக இப்படி ஏதேனும் செய்துவிடுவார். ஏதாச்சும் பண்ணனுமே என நான் தவித்துக்கொண்டிருந்த நேரத்தில், ‘குருதி ஆட்டம்’ தயாரிப்பாளரிடமிருந்து போன். சம்பள பாக்கியிலிருந்து கொஞ்சம் கொடுத்தார்கள். ‘அப்பாடா’ என இருந்தது. உடனே உதவி இயக்குனர்களை கூப்பிட்டு அவர்களுக்கும் பணம் கொடுத்து ஊருக்கு அனுப்பிவிட்டு, இப்போதைய பிரச்சனையை சமாளித்துவிடலாம் என ஊருக்கு சென்றேன்.

போனால், ஒரு குழந்தை விளையாடிக்கொண்டிருக்கிறான். என்னைப் பார்த்து அழகாக சிரிக்கிறான். மேலே ஏறி விளையாடுகிறான். ‘யாரும்மா’ என கேட்டால், அம்மா, ‘இந்த சாய் பாபா வண்டி ஒண்ணு வரும்பா. அவங்க குழந்தை. எல்லா வாரமும் நம்ம ஏரியாவுக்கு வரும்போதெல்லாம், இங்க விட்டுட்டு போவாங்க. அது பாட்டு விளையாடிட்டிருக்கும். இவன பாத்தா நம்ம சிவா(தம்பி) மாதிரியே இல்ல..’ என்றபடி, குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுக்க, அழகாக குடிக்கிறான். நான் சிரித்தபடி, கொஞ்சம் பணம் வந்திருக்கும்மா என கொடுக்கிறேன்.

சிறிது நேரத்தில் குழந்தையின் அம்மா வர, அம்மா கொஞ்சம் பணத்தை என்னிடம் கொடுத்து, ‘அவங்களிடம் கொடுப்பா’ என்கிறார். நான் ‘என்னம்மா...’ என, ‘கொழந்தைக்கு அடுத்த வாரம் பிறந்த நாள் வருதுப்பா. இடுப்புல எதுவும் இல்லாம இருக்கான். அவனுக்கு ஒரு வெள்ளி அரைஞாண்கயிறு வாங்கணும். கைல பணமில்லையேன்னு நெனச்சிட்டே இருந்தேன்’ என்கிறார்.

சட்டென வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டேன். இந்த வருடத்தின் சிறந்த தருணங்களில் ஒன்றாக அந்த நிமிடம் இருந்தது.

click me!