ஒரே தியேட்டரில் 1,200 வாரங்களாக தொடர்ந்து ஓடும் திரைப்படம்!

By vinoth kumarFirst Published Oct 25, 2018, 5:06 PM IST
Highlights

ஷாருக்கான் - கஜோல் நடிப்பில் வெளியான தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே திரைப்படம் மும்பையில் ஒரு திரையரங்கில் 1200 வாரங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருப்பது ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஷாருக்கான் - கஜோல் நடிப்பில் வெளியான தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே திரைப்படம் மும்பையில் ஒரு திரையரங்கில் 1200 வாரங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருப்பது ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.  

1995 ஆம் ஆண்டு ஆதித்யா சோப்ரா என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவான தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே என்ற திரைப்படத்தில் ஷாருக்கான், ராஜ்  என்ற கேரக்டரிலும் கஜோல் சிம்ரன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். படம் வெளியாகி சக்கைபோடு போட்ட நிலையில் அதன் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் வெளியாகி 1200 வாரங்களைக் கடந்து விட்ட நிலையில் மும்பையில் உள்ள மராத்தா மந்திர் என்ற திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. 

மென்மையான காதலை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம் 23 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருப்பதை ஷாருக்கான் மற்றும் கஜோலின் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இருவரும் அதற்காக நன்றி தெரிவிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், 23 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பமான ஒரு விசேஷ பயணம் இன்று வரை தொடர்கிறது. ராஜ் மற்றும் சிம்ரனின் கதையை பெரிய திரையில் 1200 வாரங்களைக் கடந்து இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறீர்கள். எங்கள் மீது இத்தனை ஆண்டுகள் நிபந்தனையற்ற அன்பு செலுத்தியதற்கு மிக்க நன்றி என பதிவிட்டுள்ளார். 

அதே நேரத்தில் கஜோல் தனது ட்விட்டர் பக்கத்தில், 1,200 வாருங்கள் தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. இவ்வளவு ஆண்டுகளாக இந்த படத்தின் மீது நீங்கள் காட்டி வரும் அத்தனை அன்புக்கும் நன்றி. இது என்றும் எப்போதும் எங்கள் அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒரு படமாக இருக்கும் என சிலாகித்துள்ளார். அதேபோல், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் கூட, தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே படத்தில் ரசிகர்களுக்கு நன்றி பாராட்டி உள்ளனர்.

click me!