
Unreleased Movies in Tamil Cinema : கனவு தொழிற்சாலையாக கருதப்படும் சினிமா துறை சிலருக்கு நல்ல கனவாக இருந்தாலும், பலருக்கு மோசமான கெட்ட கனவாகவே மாறி உள்ளது. திறமை, உழைப்பு, தொழில்நுட்ப அறிவுகளுடனும், சினிமா கனவுகளுடன் கோடம்பாக்கத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தாலும், அதிர்ஷ்டம் என்ற ஒன்று இல்லாமல் போவதால் புயலில் காணாமல் போகும் புல்லை போல சினிமா துறை அவர்களை காணாமல் செய்துவிடுகிறது. சினிமாவில் கத்துக்குட்டி, சினிமாவை கரைத்து குடித்தவர்கள் என எந்தவித பாரபட்சமும் இன்றி, இந்த அதிர்ஷ்டம் என்பது அனைவரையும் சமத்துவமாக செய்கை செய்த சம்பவம் இங்கு ஏராளமாக உள்ளன.
அதனையும் மீறி சினிமாவில் கால்பதித்து ஒரு படத்தை எடுத்துவிட்டால், பணம், சென்சார், கால்ஷீட், ஈகோ பிரச்சனை என சுழலில் மாட்டிக்கொள்கிறார்கள். இதனால் ஏராளமான படங்கள் இன்றளவும் கிடப்பில் உள்ளன. அப்படி கிடப்பில் இருந்த ஒரு படம் பல தடைகளை கடந்து ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது தான், அதுபோல் ரிலீஸ் ஆகாமல் இருக்கும் பல படங்களுக்கு ஒரு நம்பிக்கை பெருமூச்சை விட வைத்துள்ளது. அந்த படம் தான் மதகஜராஜா. சுமார் 13 ஆண்டுகளுக்கு பின் இந்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடி வசூலித்து பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது.
மதகஜராஜா படத்தின் வெற்றிக்கு பின்னர் பல வருடங்களாக கிடப்பில் கிடக்கும் படங்களை தூசி தட்ட தொடங்கி உள்ளது கோலிவுட். அப்படி நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் படங்களை பற்றி தற்போது பார்க்கலாம். தமிழ் சினிமாவில் பொழுதுபோக்கு படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் என்று கருதப்படுபவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் சத்யராஜ், ஜெய், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், மிர்ச்சி சிவா உள்ளிடோர் நடித்த படம் பார்ட்டி. முழுக்க முழுக்க பிஜி தீவில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு அந்நாட்டின் ஆட்சி மாற்றம், கொரோனா ஊரடங்கு காரணமாக தடையில்லா சான்று இன்று வரை தரப்படவில்லை என கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள இப்படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் சிவா தெரிவித்துள்ளார்.
இதேபோன்று ஹாலிவுட் பாணியில் படங்களை இயக்கும் ஸ்டைலிஷ் இயக்குனரான கெளதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவான படம் துருவ நட்சத்திரம். இப்படமும் பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிப் போய் உள்ளது. இதில் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், விநாயகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிதிப்பிரச்சனை, நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட பிரச்சனைகளால இப்படம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. மதகஜராஜா வெற்றிக்கு பின்னர் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்படம் இந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சி.எஸ்.அமுதன், தனது அடுத்த படத்தை ரெண்டாவது படம் என்ற தலைப்பில் இயக்கினார். இப்படம், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதிச்சிக்கலால், வெளியாகாமல் போனது. தனது முதல் படத்திலேயே அமுதன் பல முன்னணி ஹீரோக்களை கேலி செய்து படத்தை எடுத்திருந்தார். இதனால் பலரின் எதிர்ப்பை சந்தித்த அவரின் ரெண்டாவது படம் வெளியாக வாய்ப்பே இல்லை என்று கருதப்படுகிறது. இப்படத்தில் விமல், ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இதேபோன்று ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம், கார்த்திக் நரேனின் நரகாசூரன், சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடித்துள்ள இடம் பொருள் ஏவல், அரவிந்த் சாமி, திரிஷா நடித்த சதுரங்க வேட்டை 2, விஷ்ணு விஷாலின் ஜெகஜால கில்லாடி மற்றும் மோகன் தாஸ் உள்ளிட்ட படங்களும் ரிலீசுக்கு தயாராகி பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளன. இதுபோல இன்னும் பெயரிடப்படாத பல படங்கள், பாதி எடுக்கப்பட்ட படங்கள், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் மரணமடைந்ததால் பாதியில் நின்ற படங்கள் என பல திரைப்படங்கள் தற்போது வரை வெளியாகாமல் கிடப்பில் உள்ளன. இவை தவிர்க்கப்பட வேண்டும் என சினிமா தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆடுஜீவிதம் போன்ற படங்கள் 16 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு திரையில் வெளியாவதற்கான காரணம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு தான். ரசிகர்களிடையே டிமாண்ட் இருக்கும் பட்சத்தில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஒரு சினிமா தனக்கான தகுதியான இடத்தை அடையும் என்பது விதி. ஆனால் ஒரே பிரச்சனை என்னவென்றால், மாறிக்கொண்டே இருக்கும் ரசிகர்களின் ரசனையை இயக்குனர்கள் கணிப்பதில் தான் இருக்கிறது. ஏனென்றால் புஷ்பா 2ம் பாகத்தின் வசூலை கிட்டத்தட்ட 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உயர்த்திய இதே ரசிகர்கள் தான், அன்பே சிவம், கடைசி விவசாயி போன்ற திரைப்படங்களை படுதோல்வியடைய செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிடப்பில் போடப்பட்டிருக்கும் படங்களால் ஏராளமான பணமும் முடங்கிக் கிடக்கின்றன. அந்த படங்கள் ஒவ்வொன்றாக வெளியானால் தான் அதில் முதலீடு செய்தவர்கள் மீள முடியும். அதற்கான முயற்சிக்கு மதகஜராஜா ஒரு வழிவகை செய்துள்ளது. அதன்பின்னர் வெளிவரும் பழைய படங்களும் அதே போன்று வெற்றியை ருசித்தால், சினிமா மேலும் வளர்ச்சிப் பாதையை நோக்கி நகரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த டிரெண்ட் தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.