வரி விலக்கு கேட்ட தனுஷுக்கு 48 மணிநேரம் அவகாசம்..! அதிரடி உத்தரவு போட்ட நீதிபதி!

By manimegalai aFirst Published Aug 5, 2021, 3:51 PM IST
Highlights

சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி தனுஷ் தரப்பில் இருந்து தொடரப்பட்ட வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இன்று விசாரணை செய்த நிலையில், 48 மணி நேரத்திற்குள் 50 சதவீத வரியை கட்டவேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி தனுஷ் தரப்பில் இருந்து தொடரப்பட்ட வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இன்று விசாரணை செய்த நிலையில், 48 மணி நேரத்திற்குள் 50 சதவீத வரியை கட்டவேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்த தனுஷ், அந்த காருக்கான நுழைவு வரியான 60  லட்சம் ரூபாயை செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும்பட்சத்தில் காரை பதிவு செய்ய 2015ம் ஆண்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து 30 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் வரியை செலுத்தியதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விதிகளை பின்பற்றி காரை பதிவு செய்ய 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார். அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார். 

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை இன்று காலை விசாரணை செய்த நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம், விஜய்யை விமர்சித்ததை விட, தனுஷை ஒரு படி மேலாகவே விளாசி தள்ளினார். பால்காரர், ஏழைகள் கூட வண்டிகளுக்கு போடும் பெட்ரோலுக்கு ஜி.எஸ்.டி வரி காட்டுகிறார்கள், ஏன் கட்டவேண்டும் என வழக்கு தொடுக்க நினைப்பது இல்லை. அதே போல் சோப்புக்கு கூட வரி கட்டுவது கட்டாயம். எனவே நீங்கள் எத்தனை கார் வேண்டுமானாலும் வாங்கலாம் ஆனால் அதற்கான வரியை கட்ட வேண்டும் என கூறி இந்த வழக்கு இன்று மதியத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மீண்டும் இந்த வழக்கு இன்று மாலை விசாரணைக்கு வந்த போது... தனுஷின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரி பாக்கி, ரூ.30 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை,  48 மணிநேரத்திற்குள் செலுத்த நடிகர் தனுஷுக்கு அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். அதே போல் நீதி மன்றத்தில் வழக்குகள் குவிந்துள்ள நிலையில் இது போன்ற தேவையற்ற வழக்குகள் மேலும் சுமைதான் என தன்னுடைய கருத்தையும் தெரிவித்து இந்த வழக்கு முடிக்கப்பட்டது.

click me!