இயக்குநர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து பாரதிராஜா திடீர் ராஜினாமா...பகீர் பின்னணி...

By Muthurama LingamFirst Published Jul 1, 2019, 2:41 PM IST
Highlights

'தேர்தலில் போட்டியிடாமல் தலைவராகத் தேர்வு செய்யப்படுவதில் உள்ள சங்கடங்களை நான் அறிவேன். எனவே எனது இயக்குநர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’என்று திடீர் பரபரப்பு கிளப்பியிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா.

'தேர்தலில் போட்டியிடாமல் தலைவராகத் தேர்வு செய்யப்படுவதில் உள்ள சங்கடங்களை நான் அறிவேன். எனவே எனது இயக்குநர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’என்று திடீர் பரபரப்பு கிளப்பியிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா.

தமிழ்த் திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு இயக்குனர் விக்ரமன் தலைவராக இருந்து வருகிறார். இவரது பதவிகாலம் முடி வடைகிறது.இயக்குனர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பாரதிராஜாவை தலைவராக தேர்ந்தெடுக்க சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்ற பொறுப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் ஆர்.கே.செல்வமணி, கே.பாக்யராஜ், விக்ரமன், பேரரசு உட்பட ஏராளமான இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.இந்நிலையில் தேர்தல் நடத்தப்படாமல் இயக்குனர் சங்கத் தலைவராக பாரதிராஜாவை தேர்வு செய்தது தவறு என்று இயக்கு னர் ஜனநாதன் உட்பட பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

அதுகுறித்துப்பேசிய இயக்குநர் ஜனநாதன் ,’இப்போதிருக்கும் இயக்குனர் சங்கக் கட்டிடம் ஒரு காலத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியின் வீடாக இருந்தது. நான் பொருளாளராக இருந்தபோது, எங்கள் உறுப்பினர்களிடம் பணம் வாங்கி அந்த கட்டிடத்தை சொந்தமாக வாங்கினோம். கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டப் பின், சங்கத்தின் வைப்பு நிதியை வைத்துவிட்டு அடுத்த பொருளாளர் வி.சேகரி டம் ஒப்படைத்துக் கையெழுத்து வாங்கிவிட்டு வந்தேன்.கடந்த 4 வருடத்துக்கு முன் நடந்த இயக்குனர் சங்கத் தேர்தலில், தலைவர், பொருளாளர், செயலாளர் பதவிகளுக்கு போட்டி யிட்டேன். என்னைப் போல சேரன், அமீரும் மூன்று பதவிகளுக்கும் போட்டியிட்டனர். ஆர்.கே.செல்வமணி, பாரதிராஜாவை தலைவராக அறிவித்தார்,. அவர் பெரிய இயக்குனர் என்பதால், நாங்கள் தலைவருக்கான போட்டியில் இருந்து விலகினோம். பின் நான் பொருளாளர் பதவிக்கும் அமீர் செயலாளர் பதவிக்கும் சேரன் துணைத் தலைவர் பதவிக்கும் போட்டியிட்டோம். இறுதியில் நானும் சேரனும் போட்டியின்றித்தேர்வு செய்யப்பட்டோம்.இப்படி தேர்தல் முறையாக நடந்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவதுதான் சரி. முதலில், விக்ரமன் போட்டியிட்டு தலைவராகத் தேர்வானார். இரண்டாவது முறை தேர்தலே நடத்தாமல் விக்ரமனைத்தேர்வு செய்தது தவறு. அது போலவே இப்போது பாரதிராஜாவை தேர்வு செய்ததும் தவறானதுதான். இனி இதுபோன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்’என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சற்றுமுன்னர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பிய பாரதிராஜா, ‘என்னால் எந்த சங்கடங்களும் நேரவேண்டாம். போட்டியின்றி தலைவர் பதவிக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதில் எனக்கும் உடன்பாடு இல்லை’ என்று கூறி தனது ராஜினாமா கடிதத்தை அன்ப்பி வைத்துள்ளார்.

click me!