விஜய் ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பாக்யராஜின் மகன்!

By thenmozhi gFirst Published Oct 31, 2018, 12:15 PM IST
Highlights

சர்கார் கதை திருட்டு சர்ச்சை ஓய்ந்த நிலையில், படத்தின் கதையை வெளியே சொன்னதற்காக, பாக்யராஜின் மகன் சாந்தனு ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

சர்கார் கதை திருட்டு சர்ச்சை ஓய்ந்த நிலையில், படத்தின் கதையை வெளியே சொன்னதற்காக, பாக்யராஜின் மகன் சாந்தனு ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. படம் வெளியாவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் இந்தப் படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது.

உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் எழுதிய செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒன்றுதான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் கூறினார். ஆனால் இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்றும், தனது உதவி இயக்குநர்கள் குழுவின் உழைப்பு என்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்திருந்தார். சர்கார் படத்தில் பணிபுரிந்துள்ள எழுத்தாளர் ஜெயமோகனும் படத்தின் கதை திருடப்பட்டதல்ல என்றும், ஒன்றரை மாதங்களாக தானே எழுதியதாகவும் தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில் செங்கோல் கதையை எழுதிய வருண் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பும் சமாதானமாக சென்றார்கள். வருண் ராஜேந்திரன் பெயரை டைட்டில் கார்டில் வெளியிட்டு நன்றி தெரிவிக்க நீதிமன்றத்தில் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புதல் அளித்தார்.

   இந்நிலையில் சர்கார் கதை விவகாரம் தொடர்பாக பாக்யராஜ் அளித்த பேட்டி ஒன்றில் படத்தின் கதையை தெரிவித்திருந்தார். அதாவது, 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தேர்தலில் விஜய்யின் ஓட்டை வேறொருவர் கள்ள ஓட்டு போட்டு விடுகிறார்.

இதையே கருவாக வைத்து, இருவரும் மூலக்கதையை உருவாகி உள்ளனர். அதில் வருண் ராஜேந்திரன் 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்தகதையை எழுதி உள்ளார் என்றும், ஹீரோவின் ஓட்டை ஒருவர் கள்ள ஓட்டு போட்டு சென்று விட, நீதிமன்றம் சென்று தேர்தலை நிறுத்தும் ஹீரோ, தொடர்ந்து வில்லனான அரசியல்வாதிக்கு எதிராக போராடி தேர்தலில் நின்று வெற்றி பெற்று தனக்கு பிடித்தவரை கொண்டு அரசாங்கம் அமைப்பதுதான் சர்கார் மற்றும் செங்கோல் ஆகியவற்றின் மூலக்கதை என்றும், இரண்டும் ஒத்து போவதாகவும் பாக்யராஜ் தெரிவித்திருந்தார்.

பாக்யராஜின் இந்த பேட்டியால், சர்கார் படத்தின் கதை வெளியானதால், அதிர்ந்து போன விஜய் ரசிகர்கள், பாக்யராஜ் சமூகவலைதளங்களில் கடுமையாக சாடி வருகின்றனர். இது தொடர்பாக, ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாக்யராஜ் மகனும் நடிகருமான சாந்தனு, ‘’சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் இல்லை. என்றைக்கும் விஜய் அண்ணா, எனக்கு விஜய் அண்ணா தான். படத்தின் கதையை அப்பா வெளியில் சொன்னதற்கு மன்னிப்புக் கோருகிறேன். தவிர்க்க முடியாத சந்தர்ப்பம். இருப்பினும் மன்னிப்புக் கோருகிறேன். தீபாவளியை கொண்டாடுவோம். சர்காரைக் கொண்டாடுவோம்” என்று கூறியுள்ளார்.

click me!